ஐபிஎல் கப் எங்களுக்குத்தான்!- ஷாரூக்

4-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 8-ந்தேதி தொடங்கியது. நேற்றுடன் 6 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த ஐ.பி.எல். போட்டியில் அதிக தொகையான ரூ.11.04 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் காம்பீர். அவரது தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேற்று முதல் வெற்றியை பெற்றது.
வெற்றி குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் நடிகர் ஷாருக்கான் கூறியதாவது:
"ரசிகர்களுக்காகவே நான் கொல்கத்தா வந்தேன். கங்குலிக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினேன். இந்த வெற்றியை அவருக்கு அர்ப்பணிக்கிறோம். இந்த வெற்றியால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளேன். காம்பீரும், கல்லிசும் எந்தவித பதட்டமும் இல்லாமல் பொறுப்புடன் செயல்பட்டனர். உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் பொறுமையுடன் விளையாடினால் தொடர்ந்து வெற்றி பெறலாம்.
இந்த வெற்றியை நான் வரவேற்கிறேன். கடந்த 3 ஐ.பி.எல். போட்டியிலும் அணியில் தேவையில்லாத சர்ச்சை ஏற்பட்டது. இந்த முறை அப்படியில்லாமல், வெற்றியை மட்டும் இலக்காக வைத்து செயல்பட வேண்டும். இந்த முறை கோப்பையை வெல்வார்கள் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. அதற்கேற்ப சிறப்பான ஆட்டங்களை இனி பாரக்க முடியும்," என்றார்.
கொல்கத்தா அணி 2 ஆட்டத்தில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளி பெற்று உள்ளது. முதல் ஆட்டத்தில் சென்னையிடம் 2 ரன்னில் தோற்றுள்ளது. கொல்கத்தா அணி தனது 3-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 15-ந்தேதி சந்திக்கிறது.
ஐபிஎல்4 மேலும் செய்திகள்


Click it and Unblock the Notifications











