விஜய் யோசிக்காமல் அந்த முடிவை எடுத்திருக்கமாட்டார்.. தளபதி அரசியல் என்ட்ரி குறித்து பாலா மாஸ் ஸ்பீச்
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். கட்சி தொடங்கப்பட்டாலும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும்; 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவரது அரசியல் எண்ட்ரி குறித்து கலக்கப்போவது யாரு பாலா பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
விஜய்தான் கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் கடந்த சில மாதங்களாக சத்தமாகவே கூறி வந்தனர். ஆனால் விஜய்யோ லியோ படத்தின் சக்சஸ் மீட்டில், நான் மக்களுக்கு சேவை செய்பவனாகவே இருந்துவிட்டு போகிறேன் என்று ஒரு 'க்' வைத்து பேசியிருந்தார். அப்போது பலரும், கண்டிப்பாக விஜய் அரசியலுக்கு வருவது உறுதி. அதைத்தான் அவர் மறைமுகமாக சொல்லியிருக்கிறார். 2024ஆம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலிலேயே அவர் போட்டியிடுவார் என்றும் ஆரூடம் சொன்னார்கள்.

தமிழக வெற்றி கழகம்: விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்பது பலருக்கும் தெரியும். எல்லோருக்கும் இருந்த கேள்வி என்னவென்றால் கட்சி தொடங்குவதை அவர் எப்படி அறிவிப்பார், எங்கு அறிவிப்பார்; விஜயகாந்த், கமல் ஹாசன் போல் பிரமாண்ட மேடை போட்டு சொல்வாரா என்பதுதான். ஆனால் சைலெண்ட் சம்பவமாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் நீண்ட அறிக்கையை வெளியிட்டு 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை தொடங்குவதாக தெரிவித்துவிட்டார்.
உற்சாகத்தில் ரசிகர்கள்: தளபதி அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கடந்த சில வருடங்களாகவே தீவிரமாக கூறினர். மேலும் விஜய் அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆவது மாதிரியான போஸ்டர்களும் முளைக்க தொடங்கின. தற்போது விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதால் அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட உற்சாகத்தில் இருக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவோம் என்று விஜய் அறிவித்திருப்பதால் அதற்கான அச்சார பணிகளில் ஈடுபட தொடங்கியிருக்கின்றனர்.
சினிமாவுக்கு நோ: ஒருபக்கம் விஜய் அரசியலுக்குள் வந்தது உற்சாகத்தை கொடுத்தாலும் அவரது ரசிகர்களுக்கு இன்னொரு பக்கம் சின்ன சோகம் ஒன்றும் ஏற்பட்டிருக்கிறது. அதாவது இன்னும் ஒரு படத்தில் நடித்துவிட்டு முழுக்க முழுக்க மக்கள் பணிகளில் ஈடுபடுவேன். அரசியல் இன்னொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான சேவை என்று குறிப்பிட்டிருந்தது. அதை பார்த்த ரசிகர்கள் அய்யோ இனி தளபதியை ஸ்க்ரீனில் பார்க்கவே முடியாதா என்று ஏக்கமாக உச் கொட்டிவருகின்றனர்.
பாலா பேட்டி: இந்நிலையில் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து KPY பாலா பேசுகையில், "மற்றவர்களுக்கு தொடர்ந்து நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஆம்புலஸ்களை வாங்கி கொடுத்திருக்கிறேன். இதுவரை 5 ஆம்புலன்ஸ்கள் வாங்கியிருக்கிறேன். மீதம் இருக்கும் ஐந்தையும் விரைவில் வாங்கித் தருவேன். விஜய் எதை செய்தாலும் யோசித்துதான் செய்வார்.
அரசியல் ஆசை: எனக்கு அரசியல் ஆசை எதுவும் கிடையாது. என்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதற்கு நிறைய செலவு செய்கிறார்கள். அதனை என்னிடம் கொடுத்தால் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு மருந்து மாத்திரை வாங்கி தர முடியும்" என்றார். முன்னதாக சில நாட்களுக்கு முன்புதான் வாணியம்பாடி அருகே இருக்கும் கிராம மக்களுக்கு ஒரு ஆம்புலன்ஸை பாலா வாங்கிக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











