நிஜ ஹீரோவாக வாழ்ந்த புனித் ராஜ்குமாரின் பிறந்த நாள்.. தியேட்டரில் ரீ ரிலீஸான ஜாக்கி!
பெங்களூர்: மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் 49வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர், பாடகர் என அனைவராலும் ரசிக்கப்பட்ட புனித் ராஜ்குமார், 2021ம் ஆண்டு உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
பாரம்பரிய கலை குடும்பத்தில் பிறந்த புனித் ராஜ்குமார் 6 மாத குழந்தையாக இருக்கும் போதே திரையில் தோன்றினார். பெட்டடா ஹுவு என்ற படத்தில் நடித்ததற்காக 10 வயதிலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றார். மேலும், 14 வயதில் 14 திரைப்படத்தில் நடித்த, புனித் ராஜ்குமார் அப்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதிலிருந்து கன்னட மக்கள் புனித் ராஜ்குமாரை செல்லமாக அப்புஎன்று அழைத்து வருகின்றனர்.

49வது பிறந்த நாள்: மறைந்த புனித் ராஜ்குமார் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த ஜாக்கி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. சிறப்பு காட்சியாக அதிகாலை 4.30 மணி வெளியான இந்த படத்தை பார்க்க நள்ளிரவில் திரையரங்குகளில் பலர் வரிசையில் நின்றனர். புனித் ராஜ்குமார் மறைந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், துனியா சூரி இயக்கிய 2010 ஆம் ஆண்டு வெளியான ஜாக்கி படத்தை பார்க்க வந்திருந்த ரசிகர்கள், மறைந்த நடிகர் திரையில் தோன்றியபோது, ஆரவாரத்திலும் விசில் அடித்து அலப்பறை செய்தனர்.
நன்றியுள்ளவளாக இருப்பேன்: மறைந்த நடிகரின் மனைவி அஸ்வினி புனித் ராஜ்குமார் ஜாக்கி படத்தை பார்க்க திரையரங்கிற்கு நடிகை பாவனா மேனனுடன் வந்திருந்தார். அப்போது பேசிய அவர், ஜாக்கி படத்தின் அதிகாலை காட்சியை பார்க்க 2010 ஆம் ஆண்டு தியேட்டருக்கு வந்திருந்தேன். அப்போது எப்படி ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்களோ, அதேபோல பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு பார்க்கிறேன். அது எந்த வகையான அன்பு, இந்த அன்பிற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்றார்.
என்றும் மறையாது: இதையடுத்து பேசிய பாவனா, ஜாக்கி படத்தில் புனித் ஜோடியாக நடித்தேன். இது எனது முதல் கன்னட படமாகும். அப்பு ஒரு சூப்பர் ஸ்டார்; ஜாக்கி படத்தின் பாக்ஸ் ஆபிஸில் அதிசயத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பாடலுக்கு மாஸ்டர் டான்ஸ் கற்றுக்கொடுத்த போது, அப்பு, நீ அப்படி ஆடு நன்றாக ஆடு என்பார். அப்பு எப்போதும் என் அம்மாவை போல, அவருடைய அக்கறையும் அன்பும் என் நினைவை விட்டு என்றும் மறையாது என்றார்.


Click it and Unblock the Notifications











