லாரன்ஸின் பாண்டி
முனி மூலம் தமிழ் சினிமாவில், இயக்குநராக இனிமையான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ள ராகவா லாரன்ஸ் அடுத்த படத்திற்கு ஆயத்தமாகி விட்டார். இந்த முறை அவரது படத்துக்குப் பெயர் பாண்டி.
நடன இயக்குநராக, நடிகராக அவதாரம் எடுத்தவர் ராகவா லாரன்ஸ். பின்னர் தெலுங்கில் இயக்குநராக புதுமுகம் பூண்டார். அவர் தெலுங்கில் இயக்கிய இரு படங்களும் சூப்பர் ஹிட் ஆகவே அந்த சூட்டோடு தமிழுக்கும் இயக்குநராக வந்தார்.முதல் படம் முனி. சரண் தயாரிப்பில் உருவான இந்தப் படம் லாரன்ஸின் இயக்கத் திறமையை நிரூபிப்பதாக அமைந்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் தெலுங்குக்குத் திரும்பிய லாரன்ஸ், அங்கு நாகார்ஜூனாவை வைத்து பாஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இப்போது மறுபடியும் தமிழுக்குத் திரும்புகிறார். நான் அவனில்லை படத்தை தயாரித்த நேமிச்சந்த் ஜபக்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளார். படத்துக்குப் பாண்டி என்று பெயர் வைத்துள்ளார் லாரன்ஸ்.
அவரேதான் படத்தின் நாயகன். ஹீரோயினாக யார் நடிக்கவுள்ளனர் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லையாம்.
பாண்டி குறித்து லாரன்ஸ் கூறுகையில், தாய் மொழியில் படம் இயக்குவதே ஒரு சந்தோஷமான விஷயம்தான். தெலுங்கில் நான் வெற்றியை சுவைத்த போதிலும், தமிழில் வெற்றிகரமான இயக்குநராக உலா வர வேண்டும் என்ற ஆவல் இன்னும் தீரவில்லை.
முனி படம் வெற்றிப் படமானது. ஆனால் அதை பிரமாண்ட வெற்றி என்று சொல்ல மாட்டேன். அந்த பிரமாண்ட வெற்றிதான் எனது இலக்கு. அதை பாண்டி மூலம் நிறைவேற்றிக் காட்டுவேன் என்றார் லாரன்ஸ்.
முனி, பாண்டி-இந்த இரு வார்த்தைகளும் மதுரை பக்கத்து கிராமங்களில் படு பாப்புலரான பெயர்கள். அதில் முனியை வைத்து வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டு விட்ட லாரன்ஸ், பாண்டி மூலம் விஸ்வரூபம் எடுப்பார் என்று நம்புவோம்.


Click it and Unblock the Notifications











