அஜித்துடன் படம்.. பேச்சுவார்த்தையை தொடங்கிய லோகேஷ் கனகராஜ்.. உறுதியாகுமா கூட்டணி?
சென்னை: லோகேஷ் கனகராஜ்தான் இப்போது கோலிவுட்டின் சென்சேஷனல் இயக்குநராக இருக்கிறார். அவரது கடைசி படமான லியோ சுமாரான வரவேற்பை பெற்ற சூழலில் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கி முடித்திருக்கிறார். ஆகஸ்ட் 14ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கும் நிலையில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் அதில் நல்ல பெயரை பெற்றார். தொடர்ந்து கார்த்தியை வைத்து இயக்கிய கைதி அவரை ஹிட் இயக்குநராக மாற்றியது. தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர், கமலை வைத்து விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். அந்த இரண்டு படங்களுமே ஹிட் என்றாலும்; விக்ரம் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய்வரை வசூலித்தது. அப்படத்திலிருந்து லோகேஷின் மார்க்கெட் உச்சம் சென்றது.
லியோ லோகேஷ்: இப்படி வரிசையாக ஹிட் படங்களை கொடுத்துக்கொண்டிருந்த லோகேஷுக்கு முதல் சறுக்கலாக லியோ திரைப்படம் வெளியானது. கடந்த வருடம் வெளியான அந்தப் படம் தோல்வியையே சந்தித்தது. பிளாஷ்பேக் விவகாரம், மனிதர்களை பலி கொடுக்கும் காட்சி விவகாரம், திரைக்கதை என பல விஷயங்கள் லோகேஷுக்கு எதிராக திரும்பின. முக்கியமாக பிளாஷ்பேக் விஷயம் லோகேஷை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. வசூல் ரீதியாக படம் ஓகேதான் என்றாலும் விமர்சன ரீதியாக படுத்துவிட்டது.

ரஜினியுடன்: இப்போது அவர் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கியிருக்கிறார். லியோ படத்தில் சந்தித்த விமர்சனத்துக்கும், ட்ரோலுக்கும் கூலி படத்தில் பதிலடி கொடுக்க அவர் தயாராக இருக்கிறார் என்று திரைத்துறையினர் கூறிவருகிறார்கள். இப்படத்தில் ரஜினிகாந்த்துடன் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கூலி இசை வெளியீட்டு விழா: படமானது ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் இரண்டாம் தேதி நடக்கிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க அவர் எப்போது அஜித்தை இயக்குவார் என்று பலமுறை பல கேள்விகளை கேட்டுவருகிறார்கள். அவரும் அஜித்துடன் படம் பண்ண வேண்டுமென ஆசைதான் என கூறுகிறார். இந்நிலையில் அஜித்துடனான படம் குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறார்.
லோகேஷின் பேட்டி: அவர் அளித்த ஒரு பேட்டியில், "நான் அஜித்தை வைத்து நூறு சதவீதம் படம் இயக்குவேன். அவருடைய ஆக்ஷன் முகத்தை என்னுடைய படத்தில் காட்ட வேண்டும் என ஆசை இருக்கிறது. அவருடன் படம் செய்வது தொடர்பாக அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் சில மாதங்களுக்கு முன்பே பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. அனைத்தும் அமைந்தவுடன் அந்தப் படத்தின் வேலைகள் நடக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications











