யப்பா செம கூட்டணி.. தனுஷை இயக்கப்போகிறாரா லோகேஷ் கனகராஜ்?.. சம்பவம் உறுதியோ?
சென்னை: லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கிவருகிறார். இதனையடுத்து அவர் கைதி 2, விக்ரம் 2 ஆகிய படங்களை இயக்கவிருக்கிறார். அதுமட்டுமின்றி இரும்புக்கை மாயாவி என்ற படத்தையும் அவர் இயக்குகிறார். இந்தச் சூழலில் அவர் தனுஷை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாகவும்; அதனை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கவிருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகி தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
மாநகரம் படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். ஸ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா, சார்லி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக லோகேஷுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக கணித்தனர். அதன்படியே அவரது இரண்டாவது படமான கைதி மெகா ஹிட்டானது. அந்தப் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருந்தார். ஒரே இரவில் நடக்கும்படி கதையையும், திரைக்கதையையும் அவர் உருவாக்கியிருந்தார்.

விஜய்யுடன் கூட்டணி: முதல் இரண்டு படங்களுமே லோகேஷுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தன. அதன் காரணமாக மூன்றாவது படத்திலேயே பெரிய ஸ்டாரான விஜய்யை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதன்படி மாஸ்டர் படத்தை இயக்கினார். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.மேலும் அப்படத்தில் அதுவரை விஜய்யை காண்பிக்காத வகையில் லோகேஷ் காண்பித்திருந்தார். இதன் காரணமாக படத்துக்கு சூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைக்க ஹாட்ரிக் வெற்றியை அடித்தார் லோகேஷ்.
மெகா ப்ளாக் பஸ்டரும், சறுக்கலும்: மூன்று படங்களின் வெற்றிக்கு பிறகு கமலை வைத்து அவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்த வெற்றி அவரை இந்திய அளவில் கொண்டு சேர்த்தது. தொடர்ந்து விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கினார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. மேலும் பிளாஷ் பேக் போர்ஷன், நரபலி விவகாரம் என சில விஷயங்கள் லோகி மீது விமர்சனத்தை முன்வைக்கும்படி அமைந்தன. இதனால் இந்தப் படம்தான் அவரது முதல் சறுக்கல் என்று ஆனது.
கூலி: இப்போது அவர் ரஜினிகாந்த்துடன் இணைந்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருக்கிறது. இப்படத்தை வெற்றி படமாக கொடுத்து லியோவில் வாங்கிய அடியை சரிக்கட்ட முனைந்திருக்கிறார் அவர். இந்தப் படத்துக்கு பிறகு கைதி 2, விக்ரம் 2, இரும்புக்கை மாயாவி உள்ளிட்ட படங்களை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
தனுஷுடன் கூட்டணி: அதன்படி அவர் தனக்கு இருக்கும் மூன்று கமிட்மென்ட்டுகளை முடித்துவிட்டு தனுஷுடன் இணையப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் அவரை சந்தித்து லோகேஷ் கனகராஜ் கதை சொன்னதாகவும்; அது தனுஷுக்கு பிடித்துப்போனதை அடுத்து செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் இவர்கள் இருவரும் இணைவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. முன்னதாக தனுஷின் கைகளிலும் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் முடித்துவிட்டு லோகேஷுடன் தனுஷ் இணைவார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











