விஜயகாந்த் இறப்பு.. அஜித் கேதம்கூட விசாரிக்கலையாம்.. அதிர்ச்சி கிளப்பிய ரஜினி பட இயக்குநரின் மகன்
சென்னை: கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏகே என்று அவரை அன்போடு அழைத்துவருகிறார்கள். இப்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்துவருகிறார். இப்படி அவர் நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அவர் குறித்து இயக்குநரும், தயாரிப்பாளருமான பாஸ்கரின் மகன் பாலாஜி பிரபு ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அந்தப் படத்தில் நடித்துகொண்டிருந்தபோதே தன்னுடைய 62ஆவது படத்தில் கமிட்டானார். அந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக நடந்துவரும் படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவடையவிருக்கிறது. அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்திருக்கும் சூழலில் இப்போது ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடப்பதாக கூறப்படுகிறது.

அப்டேட்டுகள்: படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. ஆனால் சமீபமாக அப்டேட்டுகள் வந்தவண்ணம் இருக்கின்றன. அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா உள்ளிட்டோர் சாலையில் நடந்துவரும்படியான போஸ்டர்கள் வெளியாகின. ஆனால் அந்த போஸ்டர்களை நெட்டிசன்கள் கடுமையாக கலாய்த்துவருகிறார்கள் என்பதுதான் உண்மை. ஆனால் போஸ்டரில் காண்பிக்கப்படும் சாலையில்தான் பிரதான கதையே இருக்கப்போகிறது என்று ஏகே ரசிகர்கள் உறுதியாக கூறுகிறார்கள்.
குட் பேட் அக்லி: விடாமுயற்சி படத்தில் ஒருபக்கம் நடிக்கும் அஜித் மறுபக்கம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இப்படி ஒரே நேரத்தில் அஜித்குமார் இரண்டு படங்களில் நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டன. குட் பேட் அக்லி படமானது அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. போஸ்டர்கள் வெளியாகியும் நல்ல வரவேற்பை பெற்றன.
விமர்சனத்தை சந்திக்கும் அஜித்: இதற்கிடையே அஜித்தை சுற்றி எப்போதும் வைக்கப்படும் விமர்சனம் என்றால், அவர் எதிலுமே கலந்துகொள்ள மறுக்கிறார்; ரசிகர்களைக்கூட சந்திக்க மறுக்கிறார் என்பதுதான். ஆனால் தனது வேலை நடிப்பு அதை நான் பார்க்கிறேன் என்பது அவரது நிலைப்பாடு. அதேசமயம் அந்த வேலையை ரசிக்க ரசிகர்கள் வேண்டும்; முக்கியமாக சினிமாவில் யாராவது உயிரிழந்தால்கூடவா வரக்கூடாது என்று ஒருதரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். முக்கியமாக விஜயகாந்த்தின் இறப்புக்கு ஏன் அஜித் வரவில்லை என்று கேள்வியும் கேட்டனர்.
பாலாஜி பிரபு பேட்டி: ஆனால் அஜித் இறப்புக்குத்தான் வரவில்லை; ஃபோனில் பிரேமலதாவை தொடர்புகொண்டு துக்கம் விசாரித்தார் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் பைரவி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநரும், தயாரிப்பாளருமான எம்.பாஸ்கரின் மகன் பாலாஜி பிரபு சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர், 'சினிமாவில் ஒற்றுமையே இல்லை. யாராவது கஷ்டப்பட்டால் உதவ வேண்டும். விஜயகாந்த் எல்லாம் அவ்வளவு உதவினார். ஆனால் அவரது இறப்புக்கு பலர் வரவில்லை. ஏதேதோ காரணம் சொன்னார்கள். இதை சொன்னால் அஜித் ரசிகர்கள் கோபப்படுவார்கள். இருந்தாலும் உண்மையை சொல்லத்தானே வேண்டும். விஜயகாந்த் இறப்புக்கு அஜித் ஃபோனில்கூட கேதம் விசாரிக்கவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











