எனக்கும் தியேட்டர் வேணும் .. மன்சூர்
எல்லா தியேட்டர்களையும் சிவாஜி படத்துக்கே கொடுத்தால் எப்படி. எனது படத்தையும் திரையிட தியேட்டர்கள் தர வேண்டும் என கோபமாக கூறியுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்.
மன்சூர் அலிகான் நடித்து, இயக்கியுள்ள படம் என்னைப் பார் யோகம் வரும். சிவாஜி ரிலீஸாகும் ஜூன் 15ம் தேதி தனது படமும் வெளியாகும் என கூறியுள்ளார் மன்சூர் அலிகான். ஆனால் அவருக்கு தியேட்டர் கிடைக்கவில்லையாம்.இதுகுறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பொறுமினார். மன்சூர் கூறுகையில்,
ஜூன் 15ம் தேதியன்று எனது படம் ரிலீஸாகும் என ஏற்கனவே கூறியிருந்தேன். இந்த நிலையில் சிவாஜி படமும் அதே நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
சிவாஜி படத்தை திரையிட தியேட்டர்கள் போட்டி போடுகின்றன. எல்லாத் தியேட்டர்களிலும் சிவாஜி படத்தைத் திரையிட்டால் என்னைப் போன்றவர்கள் எப்படி படத்தை வெளியிட முடியும். எனக்கும் நான்கு தியேட்டர்களை ஒதுக்க வேண்டும்.
சிவாஜிக்கு போட்டியாக நான் படத்தை வெளியிடவில்லை. பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பது போல சிவாஜியோடு எனது படமும் ரிலீஸானால் நன்கு ஓடும் என்ற நம்பிக்கையில்தான் அதே நாளில் எனது படத்தை திரையிடுகிறேன்.
எனக்கு தியேட்டர்கள் தரப்படவில்லை என்றால் தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுப்பேன். ரஜினியையே அணுகி முறையிடுவேன். அவர் எனக்கு நியாயம் கிடைக்க உதவுவார் என்றார் மன்சூர் அலிகான்.


Click it and Unblock the Notifications











