'இவனே குள்ளம்... இதுல இன்னும் குள்ளமா அப்பு வேஷம் வேறயாண்ணு கிண்டலடிச்சாங்க!'
சென்னை: அபூர்வ சகோதரர்கள் கதையை படமாக்கும் முன் சிலரிடம் கூறியபோது, 'இவனே குள்ளம்... இதுல குள்ளமான அப்பு வேஷம் வேறயாண்ணு' என்னை கிண்டலடித்தார்கள், என்று கமல்ஹாஸன் கூறினார்.
என்றென்றும் புன்னகை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இதைத் தெரிவித்தார் கமல்.
ஆனால் இந்தக் கிண்டலையும் மீறி தான் அப்படத்தில் நடித்ததாக கூறினார் கமல்.

குள்ள அப்பு
அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல் சாதாரண மெக்கானிக் வேடத்திலும், குள்ளமான அப்பு என்ற வேடத்திலும் வருவார். இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் கமலுக்கு பெரும் திருப்பு முனையைத் தந்தது. அவர் திரையுலக வாழ்க்கையே கூட அபூர்வ சகோதரர்களுக்கு முன் - பின் என்றானது.

பரம ரகசியம்
இன்று வரை அந்த குள்ளமான வேடத்தை அவர் எப்படிச் செய்தார் என்ற ரகசியத்தை கமல் யாருக்கும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வேதனையான உண்மை
இந்த ரகசியத்தை அவர் சொல்லாவிட்டாலும், வேறொரு வேதனையான உண்மையை நேற்று அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார் கமல். சினிமாக்காரர்களுக்கு தன் படைப்பின் மீது நம்பிக்கை வேண்டும். இல்லாவிட்டால் இந்த சினிமாவில் தலையெடுக்கவே முடியாது என்பதை உணர்த்த தன் வாழ்க்கைப் பாடத்தையே உதாரணமாகச் சொன்னார் கமல்.

நம்பிக்கை முக்கியம்
அவர் கூறுகையில், "தன்னம்பிக்கைதான் சினிமாவில் ரொம்ப முக்கியம். தன்னை முதலில் நம்பணும்... இல்லன்னா நானெல்லாம் அபூர்வ சகோதரர்கள் எடுத்திருக்க முடியுமா...

நீயே குள்ளம்...
அந்தக் கதையை எடுப்பதற்கு முன் சிலரிடம் சொன்னபோது, 'உயரமான ஒருத்தர் குள்ளமா நடிச்சா பரவால்ல. அமிதாப்பச்சன் அப்படி நடிக்கலாம்... பார்க்க அழகாவும் இருப்பார். ஆனா நீயே குள்ளம், இதுல இன்னும் குள்ளமான அப்பு வேஷம் வேறயா" -ன்னு உள்ளுக்குள்ள நினைச்சிக்கிட்டவங்களும் உண்டு, வெளில கிண்டலடிச்சவங்களும் உண்டு. ஆனா அதையெல்லாம் பார்த்திருந்தா எதுவுமே செஞ்சிருக்க முடியாது..." என்றார்.


Click it and Unblock the Notifications











