ஷங்கர், அட்லீ ரூட்டை ஃபாலோ செய்யும் மாரி செல்வராஜ்.. தனுஷ் படத்தில் தரமான சம்பவம் ரெடி
சென்னை: விக்ரமின் மகன் துருவ்வை வைத்து பைசன் காளமாடன் திரைப்படத்தை கடைசியாக இயக்கினார் மாரி செல்வராஜ். கடந்த வருடம் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பலரிடமும் பெற்றது. முக்கியமாக துருவ் விக்ரமின் உழைப்பை பலர் பாராட்டினார்கள். மேலும் இந்தப் படத்தையும் முக்கியமான படமாக மாரி கொடுத்துவிட்டார் என்றும் பாராட்டுக்கள் கிடைத்தன. அடுத்ததாக அவரது லைன் அப்பில் தனுஷுடனான படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் அப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ராமிடம் உதவி இயக்குநராக இருந்து தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக மாறியிருப்பவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே அனைவரையும் அவர் கவர்ந்துவிட்டார். சாதிய கொடுமைகளை அப்பட்டமாக எந்தவிதமான சமரசமும் இல்லாமல் பரியேறும் பெருமாள் என்ற முதல் படத்தில் காண்பித்த அவர்; அடுத்ததாக இயக்கிய கர்ணன், மாமன்னன், வாழை என தொடர்ந்து தனது படங்களில் அதன் வெவ்வேறு வடிவங்களையும் பதிவு செய்தார். இதன் காரணமாக அவர் கொண்டாடவும்படுகிறார்; ஒருதரப்பினரால் விமர்சிக்கவும்படுகிறார்.

படைப்பாளர்கள் கொண்டாடுகிறார்கள்: ஆதிக்க சாதி மனப்பான்மையுடையவர்கள்தான் மாரி செல்வராஜின் படங்களையும், அவரது வெற்றியையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. அதேசமயம் கோலிவுட்டில் பாரதிராஜா தொடங்கி வெற்றிமாறன், மணிரத்னம்வரை மாரியை தலைமேல் தூக்கி வைத்துதான் கொண்டாடுகிறார்கள். ஏனெனில் மாரி செல்வராஜ் செய்துகொண்டிருப்பது எவ்வளவு அவசியமானது என்பது அவர்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கிறது.
பைசன் காளமாடன்: இதுவரை தொடர்ச்சியாக ஹிட் கொடுத்த மாரி கடைசியாக விக்ரமின் மகன் துருவ்வை வைத்து பைசன் காளமாடன் படத்தை இயக்கியிருந்தார். அதில் பசுபதி, லால், அமீர், அனுபமா, மதன் என பலர் நடித்திருந்தார்கள். கடந்த வருடத்தில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்துக்கு பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்தன. அதேசமயம் மாரியின் முந்தைய படைப்புகளில் இருந்த காத்திரம் இதில் இல்லை என்ற விமர்சனமும் எழுந்ததையும் நினைவில் கொள்ள வேண்டும்.
மாரி செல்வராஜின் லைன் அப்: மாரி செல்வராஜின் லைன் அப்பை பொறுத்தவரை எக்கச்சக்க படங்கள் அவர் கைவசம் இருக்கின்றன. முக்கியமாக கூடிய விரைவில் வாழை படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கவிருக்கிறார். அது தவிர்த்து தனுஷை வைத்து பிரமாண்டமாக ஒரு படத்தை இயக்குகிறார். அதனை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே இந்தக் கூட்டணி கர்ணன் படத்தில் இணைந்து சம்பவம் செய்திருந்தது. எனவே இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
படத்தின் பட்ஜெட்: இந்நிலையில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தை மொத்தம் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்களாம். எதிர்பார்த்ததைவிடவும் பட்ஜெட் அதிகம் போனதால்; தனது சம்பளத்தை கொஞ்சம் குறைத்து 15 கோடி ரூபாயாக மாரி பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக, தமிழிலிருந்து ஷங்கர், அட்லீ உள்ளிட்டோர் நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் படங்கள் எடுக்கிறார்கள். தற்போது இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் மாரியும் அவர்கள் லிஸ்ட்டில் சேரவிருக்கிறார்.


Click it and Unblock the Notifications















