விஜயகாந்த் இறப்பு செய்தி கேட்டதும் ரஜினி சொன்ன முதல் வார்த்தை இதுதான்.. மீசை ராஜேந்திரன் எமோஷனல்
சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் உயிரிழந்தார். அதனையடுத்து அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள் முதல் சாமானியர்கள்வரை பலரும் நேராக சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர். அவர்களில் ரஜினிகாந்த்தும் ஒருவர். இந்த சூழலில் விஜயகாந்த் இறப்பு செய்தி கேட்டதும் ரஜினிகாந்த் ரியாக்ஷன் குறித்து மீசை ராஜேந்திரன் தெரிவித்திருக்கிறார்.
விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த 6 வருடங்களுக்கு மேலாகவே பாதிக்கப்பட்டிருந்தார். அமெரிக்காவில் அதற்காக அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருந்தது. அறுவை சிகிச்சையை முடித்துக்கொண்டு வீடு திரும்பியிருந்த அவர் அரசியல், சினிமா ஆகியவைகளிலிருந்து முழுமையாக விலகி வீட்டில் முழு ஓய்வில் இருந்தார். அவ்வப்போது பண்டிகை தினம், பிறந்தநாளில் மட்டும் ரசிகர்களையும், தொண்டர்களையும் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

மீண்டும் உடல்நலக்குறைவு: சூழல் இப்படி இருக்க கடந்த டிசம்பர் மாதத்தில் மீண்டும் அவருக்கு இரண்டு முறை உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல் தடவை அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனளித்து வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவர் தேமுதிக பொதுக்குழுவில் கலந்துகொண்டார். அவர் கலந்துகொண்ட சில நாட்களிலேயே மீண்டும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
உயிரிழப்பு: ஆனால் இந்த முறை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. நம்மில் ஒருவரை இழந்துவிட்டோமே என சாமானியர்கள் கண் கலங்கினார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சென்று விஜயகாந்த்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வந்த ரஜினி வராத வடிவேலு: இதற்கிடையே விஜயகாந்த்தின் இறப்பு செய்தியை அறிந்தவுடன் வேட்டையன் பட ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டார் ரஜினி. கன்னியாகுமரியிலிருந்து நேராக சென்னை வந்த விஜயகாந்த்தின் உடலுக்கு தீவுத்திடலில் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். அதேபோல் கமல் ஹாசனும் வந்துவிட்டார். ஆனால் வடிவேலு வரவில்லை. மேலும் இன்றுவரை ஒரு இரங்கல்கூட தெரிவிக்கவில்லை. இது அவருக்கு கடுமையான விமர்சனத்தையும், கண்டனத்தையும் பெற்றுக்கொடுத்திருக்கிறது.
மீசை ராஜேந்திரன் பேட்டி: இந்நிலையீல் விஜயகாந்த்தின் இறப்பு செய்தியை கேட்டதும் ரஜினிகாந்த்தின் ரியாக்ஷன் என்னவாக இருந்தது என்பது குறித்து நடிகர் மீசை ராஜேந்திரன் தெரிவித்திருக்கிறார். தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "கேப்டன் விஜயகாந்த் இறந்த செய்தி வெளியான ஐந்தே நிமிடங்களில் ரஜினிகாந்த்தின் பி.ஏ. என்னை தொடர்புகொண்டு அந்த செய்தியை உறுதிப்படுதிக்கொண்டார். பிறகு சிறிது நேரத்தில் ரஜினிகாந்த்தே நேரடியாக என்னிடம் தொலைபேசியில் பேசினார்.
அழுதுவிட்டேன்: ரஜினிகாந்த்தின் குரலை கேட்ட உடனேயே நான் அழுதுவிட்டேன். அதை கேட்டுவிட்டு ரஜினிகாந்த் என்னிடம், 'வருத்தப்படாதீர்கள்.. எப்போது அடக்கம் செய்கிறார்கள்?' என்று கேட்டு ஆறுதல் சொன்னார். நான் நாளை அடக்கம் செய்கிறார்கள் என்று சொன்னதும், இப்போது நான் கன்னியாகுமரியில் இருக்கிறேன். நாளை வருகிறேன் என சொன்னார். சொன்னபடியே மறுநாள் நேரில் வந்து விஜயகாந்த்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்" என்றார்.


Click it and Unblock the Notifications











