கல்கி படத்தில் கமல் ரோலில் நடித்திருக்க வேண்டிய நடிகர் அவரா?.. மிஸ் ஆகிடுச்சே
சென்னை: பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 ஏடி திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. பான் இந்தியா படமாக ரிலீஸான கல்கிக்கு நாடு முழுவதுமே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில் பாகுபலி படத்தைவிடவும் பிரமாண்ட் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்தனர். இதில் கமல் ஹாசனும் நடித்திருந்தார். ஆனால் அவரது கதாபாத்திரமும் பெரிதாக எடுபடவில்லை.
பிரபாஸ் நடிப்பில் கடந்த வருடம் சலார் திரைப்படம் வெளியானது. கேஜிஎஃப் படத்தை இயக்கி இந்தியா முழுவதும் பிரபலமடைந்து; கன்னட நடிகர் யஷ்ஷுக்கு தரமான சம்பவம் செய்த பிரசாந்த் நீல் இயக்குநர் என்பதால் அந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் பிரபாஸ். ஏனெனில் அதற்கும் முன்னதாக அவர் நடித்த ஆதிபுருஷ் படம் படு மொக்கை வாங்கியது. எனவே சலார் தனக்கு பெரும் வெற்றியை கொடுக்கும் என நம்பியிருந்தார். ஆனால் அந்தப் படம் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக ரிசல்ட்டை கொடுத்தது.

கல்கி 2898 ஏடி: சூழல் இப்படி இருக்க நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 ஏடி படத்தில் நடிக்க கமிட்டானார் பிரபாஸ். இந்தப் படத்துக்கு முன்னதாக வெளியான இரண்டு படங்களுமே தோல்வியடைந்ததால்; இந்தப் படத்தையும் தோல்வியாக கொடுத்து ஹாட்ரிக் தோல்வியை பெற்றுவிடக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தார் பிரபாஸ். படமும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவானது. மேலும் கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி என பான் இந்தியா ஸ்டார்களையும் கமிட் செய்தார்கள்.
படம் ரிலீஸ்: படமானது மிகப்பெரிய எதிர்பார்ப்போடு அண்மையில் திரையரங்குகளில் வெளியானது. பிரமாண்ட பட்ஜெட், பான் இந்தியா ஸ்டார்களின் ஐக்கியம் என எக்கச்சக்க ஹைப்போடு வெளியான படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்தோடு தியேட்டருக்கு சென்றனர். ஆந்திரா, தெலங்கானாவின் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. அங்கு படத்துக்கு பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்தன.
தமிழ்நாட்டில் டல்: ஆனால் தமிழ்நாட்டில் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களே கிடைத்தன. முக்கியமாக கமல் ஹாசன், அமிதாப் பச்சனை எல்லாம் படத்தில் நடிக்க வைத்து வேஸ்ட் ஆக்கிவிட்டார்கள் என்றும் ஓபனாக கூறினர். இதனால் படக்குழு கொஞ்சம் அப்செட் ஆனதாகவே கூறப்படுகிறது. இதேபோல்தான் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்துக்கு நிகழ்ந்தது என்பது கவனிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் கல்கி படம் ஒர்க் அவுட்டாகாமல் போனதற்கு அதன் கதையும், மேக்கிங்கும்தான் காரணம் என்று கருதப்படுகிறது.
எடுபடாத கமல் ரோல்: படமானது இந்த மாதம் 29ஆம் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகிறது. இதற்கிடையே இந்தப் படத்தில் கமல் ஹாசன் ஏற்றிருந்த கதாபாத்திரமும் தமிழ்நாட்டில் எடுபடாமல் போனது. இந்நிலையில் அந்த ரோலில் கமலுக்கு பதிலாக வேறு ஒரு நடிகர்தான் நடிக்கவிருந்தார். அதாவது கமல் ஏற்றிருந்த யாஸ்கின் பாத்திரத்துக்கு முதலில் மோகன் லாலை நடிக்க வைக்கத்தான் படக்குழு முடிவு செய்திருந்ததாம். ஆனால் மோகன் லாலைவிடவும் கமல் சரியாக இருப்பார் என்று பிறகு முடிவு செய்து கமலை நடிக்க வைத்தார்களாம்.


Click it and Unblock the Notifications











