சென்னைக்காரன் நான்.. மசால் தோசை ரொம்ப பிடிக்கும்.. நாக சைதன்யா ஜாலிப்பேட்டி!
சென்னை :நடிகர் நாகசைத்தன்யா நடிப்பில் தாங்க்யூ படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
ராஷி கண்ணா ஜோடி சேர்ந்து நடித்திருந்த இந்தப் படம் கடந்த 22ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியிருந்தது. பிரபல இயக்குநர் விக்ரம் குமார் இயக்கியிருந்தார்.
இந்தப் படத்திற்கான பிரமோஷன்களில் கலந்துக் கொண்ட நாக சைத்தன்யா சென்னை தன்னுடைய இதயத்திற்கு நெருக்கமான ஊர் என்று கூறியுள்ளார்.

நடிகர் நாக சைத்தன்யா
நடிகர் நாக சைத்தன்யா தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உள்ளார். அவரது அப்பா நாகார்ஜுனாவும் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், இருவரும் இணைந்தும் படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், நாக சைத்தன்யாவின் தாங்க்யூ படம் கடந்த 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

தாங்க்யூ படம்
இந்தப் படத்தில் ராஷி கண்ணா, நாக சைத்தன்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். பிரபல இயக்குநர் விக்ரம் குமார் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். அதிகமான எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம் ரசிகர்களை கவரவில்லை. இந்த ஆண்டின் இதுவரை வெளியான படங்களில் மிகவும் மோசமான வசூலை பெற்றுள்ள படம் தாங்க்யூ என ஆந்திர பாக்ஸ் ஆபீஸ் தெரிவித்துள்ளது.

கலவையான விமர்சனங்கள்
இவரது முந்தைய படமான பங்காருராஜூ முதல் நாளிலேயே 10 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த நிலையில், இந்தப் படம் முதல் நாளில் வெறும் 4.5 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்தது. திரையரங்குகளில் இந்தப் படம் காத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகவுள்ள இருமொழிப் படத்தில் நாக சைத்தன்யா கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு கிருத்தி ஷெட்டி ஜோடி சேர்ந்துள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைத்தன்யா
இந்தப் படத்தில் தான் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளதாகவும் த்ரில்லர் வகைப்படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாகவும் நாக சைத்தன்யா தன்னுடைய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் தான் நேரடியாக தமிழ் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

19 ஆண்டுகள் சென்னைவாசம்
மேலும் சென்னையில் தான் தன்னுடைய பள்ளி, கல்லூரி படிப்பை முடித்ததாகவும் சுமார் 19 ஆண்டுகள் சென்னையில்தான் தான் இருந்ததாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தான் சென்னைக்காரன்தான் என்று கூறியுள்ள அவர், சரவணபவன் மசால்தோசை, சாட் வகைகள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிடித்த நாயகிகள் கத்ரினா, நயன்தாரா
சென்னை லைப்ஸ்டைல் தன்னுடைய இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியில் கத்ரினா கையிப் மற்றும் தமிழில் நயன்தாரா தனக்கு பிடித்த நடிகைகள் என்றும் இந்த பட்டியல் மேலும் நீளும் என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











