நெப்போலியன் “ரீ என்ட்ரி டைம்”.. அதிக பொருட்செலவில் உருவாகும் 'அமெரிக்க ஆவி'!
சென்னை: தமிழ் திரைப்பட உலகில் வில்லன், ஹீரோ,குணச்சித்திரம் என எத்தனையோ விதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் தனி முத்திரை பதித்தவர் நடிகர் நெப்போலியன். அரசியல், சினிமா என இரண்டிலும் கலக்கி வந்த நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். மகன் தனுஷ், தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது சிகிச்சைக்காக அமெரிக்காக சென்ற நெப்போலியன், சினிமா, அரசியல் என அனைத்தையும் விட்டு விட்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். தற்போது, நெப்போலியன் மீண்டும் நடிகராக களமிறங்க உள்ளார்.
இந்நிலையில், ரசிகர்களை மகிழ்விக்கும் முக்கியமான செய்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உலகெங்கும் வாழும் எனது அன்பு நண்பர்களே,
தமிழ்ச் சொந்தங்களே, வணக்கம்..! உங்களின் அன்போடும், ஆசீர்வாதத்தோடும்
பல படங்களில் நடித்து பேரும், புகழையும் பெற்ற நான், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க முடிவு செய்து, அந்த படத்தை Jeevan Films என்ற நிறுவனத்தின் பெயரில் எங்களது மகன்கள் தனுஷ் மற்றும் குணால் "அமெரிக்க ஆவி" என்ற இந்தப் படத்தை தயாரித்து வழங்க இருக்கின்றனர்.

நெப்போலியன்: அதற்கான கதை தேர்வு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. நான் பல்வேறு படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருந்தாலும், இந்தப் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கின்றேன். எனது ரசிகர்கள் வேண்டுகோளுக்கிணங்க குழந்தைகள் முதல் குடும்பத்தில் உள்ள பெண்கள் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகிய அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் நகைச்சுவை கலந்த ஹாரர் படமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளோம். மேலும், இப்படம் அதிக பொருட் செலவில் அமெரிக்காவிலே படமாக்கப்படவுள்ளது.
அமெரிக்க ஆவி: இந்தப் படத்தை எழுதி இயக்குபவர் தஞ்சை ஜேபிஆர். இவர் ஏற்கனவே ஓநாய்கள் ஜாக்கிரதை எனும் படத்தை 2017 ஆண்டு இயக்கியுள்ளார். இப்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். மேலும், இப்படத்திற்காக தொழில் நுட்ப கலைஞர்கள், மற்றும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் முதல் படப்பிடிப்புக்கான முதற் கட்ட வேலைகள் தொடங்க இருப்பதாக பதிவிட்டுள்ளார். தனது மகனுக்காக பெரிய தியாகம் செய்த நெப்போலியன், மீண்டும் திரையுலகிற்கு திரும்பி வருவது, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications