twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இணையதள, வாட்ஸ்ஆப் விமர்சனங்களைத் தடுக்க முடியாது.. தேவையுமில்லை... - அதான் கமல் ஹாஸன்!!

    By Shankar
    |

    நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு இது. அப்போது திடீரென தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இணையதளப் பத்திரிகைகளே வேண்டாம் என முடிவெடுத்து, அறிவித்தும் விட்டனர். வாய்மொழியாகத்தான்.

    சரி, எந்த நிகழ்ச்சிக்கும் போக வேண்டாம் என முடிவு செய்து, அனைத்து நிகழ்ச்சிகளையும் புறக்கணிக்கத் தொடங்கிய நிலையில், முதல் அழைப்பு கமல் ஹாஸனிடமிருந்து வந்தது. சவேரா ஹோட்டலில் சந்திப்பு. இத்தனைக்கும் அவரது படம் உன்னைப் போல் ஒருவன் வெளியாக கணிசமான நேரம் இருந்தது.

    No censor need for Social Network criticism, says Kamal

    இணையதளப் பிரச்சினை பற்றி எதுவும் பேசாமல், பொதுவாக பேசிக் கொண்டிருந்தார். தன் மகள் ஸ்ருதியின் இசை ஆர்வம் பற்றிப் பேசினார்.

    அப்போது மறைந்த நிருபர் ராதாரவி, சார், இணையதளங்களை முடக்குவது சரிதானா? நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்களும் ஒரு தயாரிப்பாளர்தானே? என்று கேட்டார்.

    உடனே கமல், "இதைப் பேசக் கூடாதுன்னு நினைச்சேன். ஏன்னா இந்தத் தடையெல்லாம் நிக்காது. அறிவியல் மாற்றம், தொழில் நுட்ப வளர்ச்சியைத் தடுக்கும் முயற்சியில் யாராவது ஜெயிச்சிருக்காங்களா.. யாரும் கவலைப்பட வேண்டாம். இதுவே பிரஸ் மீட்தானே. நீங்களும் இருக்கிறீர்கள் அல்லவா..." என்றால் ரொம்ப நிதானமாக. கமல் சொன்னது போல அடுத்த மூன்றாவது நாள் அந்தத் தடை விலகியது.

    புதிய தொழில்நுட்பங்களை வரவேற்பதில் கமல் அத்தனை முற்போக்குவாதி. சினிமாவின் வருங்காலத் தொழில்நுட்பத்தைக் கணிப்பதில் வல்லவர்.

    இப்போது இணையதளங்கள், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் வரும் விமர்சனங்களால் படங்கள் பாதிக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து குமுதம் பத்திரிகையில் கமலிடம் பிரபலங்கள் கேள்வி பகுதியில் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார் விவேக்.

    தடை வருமா?

    அதில், "சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் என்பவற்றின் வருகையால் தனி மனிதன் ஒவ்வொருவனும் ஒரு விமர்சகனாக மாறி, படம் பார்க்கும்போதே, தியேட்டரிலிருந்து, படம் மொக்கே.. வந்துடாதே மச்சான் என்று நூறு மெசேஜ் அனுப்புகிறார்கள். நூறு ஆயிரமாகி, லட்சமாகி படத்துக்கு வரவேண்டியவர்களை வரவிடாமல் தடுத்துவிடுகிறது. ஒரு பத்திரிகை விமர்சனமென்றால் அதில் ஒரு நேர்மை, நேர்த்தி இருக்கும். ஆனால் இவர்களின் கமெண்ட்களில் அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

    நடிகர் எம்எஸ் பாஸ்கர் இறந்துவிட்டார், சிவகார்த்திகேயன் விபத்தில் மரணம் என்றெல்லாம் பொய்யான செய்திகள் பரவுகின்றன. இது சரியா.. அரசாங்கம் இதற்கு சென்சார் கொண்டு வருமா?

    இதற்கு ககமலின் பதில் இது...

    "இன்டர்நெட் வருவதற்கு முன்பே நானும் அண்ணன் ஜேசுதாஸ் அவர்களும் ஒரே நாளில் இறந்து போன வதந்தி எங்கள் காதுகளுக்கே எட்டியது. சிரித்தபடி ஒருவருக்கொருவர் இரங்கல் தெரிவித்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டன.

    பள்ளியில் ஹெட்மாஸ்டர் இறந்துவிட்டதாக திடீர் ஒப்பாரி வைத்து 10 மாணவர்கள் அழுது நடித்துக் கொண்டிருந்தபோது, அந்த ஹெட் மாஸ்டரே எனக்குத் தெரியாமல் பின்னால் நின்று வேடிக்கைப் பார்த்தார். ஒப்பாரி நாடகத்தின் ஆசிரியன் நான்தான். தண்டனை கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தேன். ஆனால் அவர் தினமும் காலை பள்ளியின் முதல் மாடியிலிருந்து பள்ளியின் அத்தனை மாணவர்களுக்கும் அறிவுரை சொல்லும் உயர்மாடத்தில் அவர் என்னை நிதம் காலையில் நிற்கவைத்து, பேச வேண்டிய பொன் மொழிகளையும் பேச வைத்தார். அம்மனிதர் பெயர் திரு நரசிம்மன். நரசிம்மன் & ஷெப்பர்ட் என்ற ஆங்கில இலக்கணப் புத்தகத்தின் ஆசிரியர் அவர். அவர் நிஜமாகவே இறந்துபோய் இறுதிச் சடங்குக்குப் போய் நின்றபோது, இறந்தவர் முகத்தில் ஒரு சின்ன புன்னகை தெரிந்த பிரமை எனக்கு.

    விமர்சனத்துக்கு வரம்போ தணிக்கையோ இருக்கக் கூடாது. தரம் குறையும்போது, விமர்சகனே விமர்சனத்தின் மதிப்பெண்ணைக் கோடிட்டுக் காட்டிவிடுவான்.

    இன்டர்நெட் விமர்சனுக்கு தடைபோடுவதும், பெண்ணுக்குத் தாலி கட்டுவதும் அவர்களின் கற்புக்கு உத்தரவாதமாகாது. அவர்கள்தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். நம் கலையும் திறமையும் மக்கள் ஆதரவுடன் எல்லா சமகால விமர்சனங்களையும் கடந்து வாழ உழைக்க வேண்டும் என்பதே என் பணிவிலா கருத்து.

    -இவ்வாறு கூறியுள்ளார் கமல்ஹாஸன்.

    English summary
    Kamal Hassan says that there is no need for censor for Social Networks criticism on movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X