வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் அப்படியே இருக்கே.. படையப்பா மருமகனின் வெறித்தனமான ஒர்க்கவுட்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராஜமாதா ரம்யா கிருஷ்ணன் என மிகப்பெரிய நடிப்பு பட்டாளமே நடித்த படையப்பா திரைப்படம் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை வெளியாகிறது. இந்நிலையில், அந்த படத்தில் விஜய்யே நடிக்க ஆசைப்பட்ட ரோலில் நடிகர் அப்பாஸ் நடித்திருந்தார்.
50 வயதை அப்பாஸ் கடந்துள்ள நிலையில், அவர் மீண்டும் தமிழில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்து வரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், இந்த வயதிலும் ஃபிட்டாக தனது உடலை வைத்துக் கொள்ள தொடர்ந்து அவர் வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்யும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

படையப்பா படத்தில் ரஜினிகாந்தை பார்த்து அப்பாஸ் சொன்ன வசனத்தை தற்போது ரசிகர்கள் அவரை பார்த்து சொல்லி வருகின்றனர்.
தபு முதல் ஐஸ்வர்யா ராய் வரை: 1996ம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளியான காதல் தேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் அப்பாஸ். முதல் படத்திலேயே அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தபு நடித்திருந்தார். விஐபி, பூச்சூடவா படங்களில் சிம்ரன் உடன் இணைந்து நடித்திருந்தார். காதல் கொண்டேன் படத்தில் அவருக்கு காதல் ஜோடியாக ஐஸ்வர்யா ராயே உடன் நடித்தார். ரஜினிகாந்துக்கே அதுவரை கிடைக்காத அதிர்ஷ்டம் அப்பாஸுக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

படையப்பா மருமகன்: நாளை ரீ ரிலீஸ் ஆகவுள்ள ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் நாசர் மகனாகவும் படையப்பாவின் மருமகனாகவும் அப்பாஸ் நடித்திருப்பார். ரஜினிகாந்த் கிளைமேக்ஸில் சட்டையை கழட்டி தனது கட்டுமஸ்த்தான உடம்பை காட்டி சண்டை போடும் போது "உங்களுக்கு வயசே ஆகல" என அப்பாஸ் வாயை பிளப்பார். இந்நிலையில், அவர் தனது 50 வயதிலும் ஆணழகனாக உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
மீண்டும் தமிழில்: லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநராக பணியாற்றிய மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்து வரும் ஹேப்பி ராஜ் படத்தின் மூலம் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழில் காலடி எடுத்து வைக்கவுள்ளார் அப்பாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. படையப்பா ரீ ரிலீஸ் கொண்டாட்டத்திலும் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











