twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாட்டுப் பொங்கல் தான் எங்க குலத்திருவிழா...: பரோட்டா சூரி

    |

    சென்னை: மாட்டுப் பொங்கல் தான் தனது குலத் திருவிழா எனத் தெரிவித்துள்ள காமெடி நடிகர் 'பரோட்டா' சூரி, தான் கிராமத்தில் கொண்டாடிய பொங்கல் பண்டிகையை குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.

    வெண்ணிலா கபடிக் குழு படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சூரி. அப்படத்தில் அவரது 'பரோட்டா' காமெடி அனைவரையும் நினைத்து, நினைத்து சிரிக்க வைத்ததால், அவரது பெயரோடு ஒட்டிக் கொண்டது பரோட்டா. இன்றைய சூழ்நிலையில் தனது காமெடி மற்றும் குணாச்சித்திர நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துள்ளார் பரோட்டா சூரி.

    இவர் விவசாய வேலைகளோடு, தனது பிள்ளைகளையும் கண்ணும் கருத்துமாக வளர்த்த தனது தாயோடு, தான் கிராமத்தில் கொண்டாடிய மாட்டுப் பொங்கல் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது :-

    மாட்டுப் பொங்கல்....

    மாட்டுப் பொங்கல்....

    பண்டிக திருநாள்னா, மொதல்ல எங்க ஆத்தா தான் மனசுல வந்து போகும். அதுலயும் மாட்டுப் பொங்கல்தேன் எங்க குலத் திருவிழா. விவசாயக் குடும்பமான எங்களுக்குச் சோறு போட்டது, மாடுங்கதேன். எங்க வீட்ல அம்பது, அறுவது மாடுங்க இருக்கும். அத்தனை மாட்டையும் ஒத்தை ஆளா ஆத்தா பாத்துக்கும்.

    என் அம்மா...

    என் அம்மா...

    விடியக் காத்தால ரெண்டு மணிக்கெல்லாம் எந்திருச்சுரும் எங்க ஆத்தா. அம்புட்டு மாடுகளுக்கும் தண்ணி காட்டிட்டு பால் கறக்க உட்கார்ந்தா பால் சட்டி நிறைஞ்சு வழியும். அப்புறம் மாடுகளுக்கு புல்லு போட்டு கம்மாய்க்கு அனுப்பிட்டு கொட்டாயைக் கூட்டி அள்ளும். பொறவு கம்மாயிக்கு போயி கழுத்தளவு தண்ணியில நின்னுட்டு அந்த மாடுகள குளுப்பாட்டும். அதுகள கரைக்கு அனுப்பிட்டு ஆத்தா குளிச்சுட்டு மாடுகளுக்கு செத்த நேரம் மேய்ச்சல் காட்டும்.

    திருவிழா கோலம்...

    திருவிழா கோலம்...

    பொங்கல் வந்துட்டா போதும், முளைப்பாரி கட்டிக்கிட்டு பொம்பளைங்க போறதும் கோவிலுக்கு முன்ன மானாட்டம், ஒயிலாட்டம்னு தூள் கிளப்பறதும், வீட்டுக்கு வீடு விருந்தாளிங்க மசமசனு குவியறதும்னு ஊரே ஜேஜேனு இருக்கும்.

    இது வேறயா....

    இது வேறயா....

    மாட்டுப் பொங்கல் அன்னைக்கு ஊருக்குள்ள இருக்கற அத்தனை மாடு, கன்னுகளையும் மந்தைக்கு கொண்டு போவாங்க. காளைய அடக்க வேடிக்கை பாக்க, அத்தை, மாமா பொண்ணுங்கள சைட் அடிக்கனு மந்தையில எல்லாப் பயலுகளும் கூடுவாய்ங்க. நானும் வயசு வித்தியாசமில்லாம லுக்கு விட்டு பாப்பேன். எதுவும் கண்டுக்காது. ‘இந்த மொகரக்கட்டைக்கு இது வேறயாக்கும்...'னு மேக்கொண்டு திட்டிட்டுப் போகுங்க.

    ஜல்லிக்கட்டு...

    ஜல்லிக்கட்டு...

    மந்தைல மைக் அனவுன்ஸுமெண்ட்டு பறக்கும். ‘உசுருக்கு உத்திரவாதம் இல்லய்யா... அம்புட்டு பொடிப் பயலுகளும் ஓடி ஒளிஞ்சிக்கிருங்க...'னு காட்டுக் கத்து கத்துவாய்ங்க.

    மோதிரத்துக்கு சண்டை...

    மோதிரத்துக்கு சண்டை...

    இருக்குறதுலயே சின்னக் காளையாகூட பாத்து நான் அடக்க மாட்டேன். மத்தவங்க அடக்கும் போது நானும் போயி சேர்ந்துக்குவேன். அப்புறம் அது கொம்புல கட்டியிருந்த நெண்டு கிராம் மோதிரத்தை அதை அடக்குன 15 பயலுகளும் பிரிச்சிக்குறதுக்கு மோதுவோம்.

    கண்ணு பட்டுப் போச்சே....

    கண்ணு பட்டுப் போச்சே....

    அந்தக் கன்னுக்குட்டிய அடக்குனதுக்கே ‘ஏ ராசாவுக்கு கண்ணுப் பட்டுப் போச்சுனு'னு சொல்லி வாசல்லயே நிக்க வெச்சு எங்க ஆத்தா திருஷ்டி சுத்திப் போடும்... பாருங்க, அட அட....

    வரம் தா இறைவா....

    வரம் தா இறைவா....

    எங்க எல்லாருக்குமே எங்க ஆத்தா தான் குல தெய்வம். அந்தக் குலசாமி பேரு சேங்கை அரசி. ஆண்டவன்கிட்ட நான் கேக்குறதெல்லாம் ஒரே ஒரு வரந்தான்... ஆத்தாவுக்கு இன்னும் இருவது வருஷம் கூட கொடு சாமி' என உருக்கமாகத் முடித்துள்ளார் காமெடி நடிகர் பரோட்டா சூரி.

    English summary
    The comedy actor Parotta Suri has expressed about his Pongal celebration at his own village.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X