முதல்பாதியைப் பார்த்து 2ம் பாதியை யூகித்தால் ரூ 1 கோடி பரிசு... இது பார்த்திபன் ‘சவால்’
சென்னை: இயக்குநர் - நடிகர் பார்த்திபன், தான் இயக்கியுள்ள கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் இடைவேளைக்கு பின்னர் மீதி கதையை யூகித்துக் கூறுபவர்களுக்கு ஒரு கோடி பரிசு தருவதாக சவால் விடுத்துள்ளார்.
இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தற்போது 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ விழா சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் பார்த்திபன்.
இதில், படத்தில் நடித்துள்ள தம்பிராமைய்யா, சந்தோஷ், அகிலா, விஜய்ராம், தினேஷ், லல்லு, சாஹித்யா, படத்துக்கு பின்னணி இசையமைத்துள்ள சத்யா, கேமராமேன் ராஜரத்னம், எடிட்டர் சுதர்ன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர் கூறியதாவது :-

கதையே கிடையாது...
இப்படத்தின் தலைப்பில் மட்டுமே கதை உள்ளது. ஆனால், படத்தில் கதை இல்லை. அதேசமயம் சுவராஸ்யமான காட்சிகளின் தொகுப்பாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன்.

வாழ்க்கையின் உண்மை சுவாரஸ்யங்கள்...
மேலும் முதல் பாதியில் படம் எதை நோக்கி செல்கிறது என்பதை ரசிகர்களால் யூகிக்க முடியாது. ஆனால், இரண்டாவது பாதி படு சுவராஸ்யமாக இருக்கும். அந்த வகையில் வாழ்க்கையின் உண்மையான சுவராஸ்யங்களை இப்படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறேன்.

ஒரு கோடி பரிசு...
என் படத்தின் முதல் பாதியைப் பார்த்து விட்டு இரண்டாம் பாதி இப்படித் தான் இருக்கும் என யாராவது யூகித்துச் சொன்னால் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாயை பரிசாக தர தயாராக இருக்கிறேன்.

சிறப்புத் தோற்றம்....
முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்தே படத்தை தொடங்கினாலும் இப்போது கதைக்கு தேவையான சில பிரபல நட்சத்திரங்களும் படத்தில் நடித்து பெருமை சேர்த்திருக்கிறார்கள். விஷால், ஆர்யா, அமலாபால், விஜய்சேதுபதி, டாப்சி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் நடித்திருக்கிறார்கள்.

பாடலும் உண்டு....
அதோடு, முதலில் பாடலே இல்லாமல் படமாக்க நினைத்தேன். பின்னர் பாடலும் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் நான்கு பாடல்களை படத்தில் இணைத்திருக்கிறேன்.

4 இசையமைப்பாளர்கள்...
ஆனால் நான்கு பாடல்களுக்கும் விஜய் ஆண்டனி, அல்போன்ஸ் ஜோசப், ஷரத், எஸ்.எஸ்.தமன் என தலா ஒரு பாடல் என்று நான்கு இசையமைப்பாளர்களை வைத்து இசையமைத்திருக்கிறேன்.

பெஸ்ட் தான்...
மேலும், எங்கேயும் எப்போதும் சத்யா பின்னணி இசையமைத்திருக்கிறார். ஆக, இவர்கள் ஒவ்வொருவருமே தங்களது பெஸ்ட்டை இந்த படத்துக்கு கொடுத்திருக்கிறார்கள்.

குடைக்குள் மழை...
நான் எப்போதுமே பத்து வருடத்துக்கு பிறகு சொல்ல வேண்டியதை முன்பே சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுபவன். அப்படித்தான் குடைக்குள் மழை உள்ளிட்ட பல படங்களுக்கு கதை உருவாக்கினேன்.

தற்போதைய ரசிகர்களுக்கு தக்க...
அந்த வகையில, இப்போதைய ஆடியன்ஸ் இன்டலிஜன்டாகவும், இன்ட்ரஸ்டிங்காகவும் இருப்பதால் அதை மனதில் கொண்டு இந்த கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை இயக்கியிருக்கிறேன்.

அடுத்தமாதம் ரிலீஸ்...
மேலும், மற்றவர்களை கிண்டல் செய்து படமெடுக்கிற பழக்கம் எப்போதுமே எனக்கு இருந்ததில்லை. அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வருகிறது' என்றார்.


Click it and Unblock the Notifications











