13 நாள் கால்ஷீட்டுக்கு 21 கோடி ரூபாயா? வாய்பிளக்கும் திரையுலகம்
ஐதராபாத்: பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க, நடிகர் பவன் கல்யாணுக்கு ரூ. 21 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான படம், பிங்க். கீர்த்தி குல்ஹாரி, ஆண்ட்ரியா தரியங் உட்பட பலர் நடித்திருந்தனர். அனிருத்தா ராய் சவுத்ரி இயக்கி இருந்த இந்தப் படம் கவனிக்கப்பட்டது.
இதன் தென்னிந்திய ரீமேக் உரிமையை தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் வாங்கியுள்ளார்.

நேர்கொண்ட பார்வை
அதன்படி தமிழ் ரீமேக்கை, நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தயாரித்தார். அஜித்குமார், அமிதாப்பச்சன் நடித்த கேரக்டரில் நடித்தார். வித்யாபாலன், ஸ்ரத்தா ஶ்ரீநாத் உட்பட சிலர் நடித்திருந்தனர். ஹெச். வினோத் இயக்கி இருந்தார். இந்தப் படமும் ஹிட்டானது.

பவன் கல்யாண்
இதையடுத்து, தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. போனி கபூருடன் சேர்ந்து, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூவும் தயாரிக்கிறார். இதில், அஜித் நடித்த கேரக்டரில், பிரபல தெலுங்கு ஹீரோ பவன் கல்யாண் நடிக்கிறார்.

விரைவில் ஷுட்டிங்
நிவேதா தாமஸ், அஞ்சலி, அனன்யா நாகல்லா உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தை ஶ்ரீராம் வேணு இயக்குகிறார். ஷுட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது.

ரூ.21 கோடி சம்பளம்
தான் தொடங்கியுள்ள அரசியல் கட்சியில் பிசியாக இருக்கும் பவன் கல்யாண், இந்தப் படத்துக்கு மொத்தம் 13 நாள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளார். இதற்காக அவருக்கு ரூ.21 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைக் கேட்டு தெலுங்கு திரையுலகினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











