’பேட்ட’.. மீண்டும் பழைய ரூட்டுக்கே திரும்பிய ரஜினி!
ரஜினியின் புதிய படத்திற்கு பேட்ட எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கு பேட்ட எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ரஜினியின் படங்கள் பெரும்பாலும், அவரது கதாபாத்திரப் பெயரையே தலைப்பாகக் கொண்டிருக்கும். ஆனால், சமீபகாலமாக அப்படி ரஜினியின் கதாபாத்திரப் பெயரைத் தலைப்பாகக் கொண்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
இதற்கு பாபா, சிவாஜி, லிங்கா, காலா போன்ற படங்கள் உதாரணம். கபாலி படம் மட்டும் இதில் விதிவிலக்காக வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

வெற்றிப் படங்கள்:
முன்னதாக பாட்ஷா, அண்ணாமலை, முத்து, அருணாச்சலம், படையப்பா என ரஜினியின் கதாபாத்திரப் பெயர்களை வைத்து வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர்டூப்பர் ஹிட்டடித்தன. ஆனால், பெயர் தான் படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கிறது எனக் கூறமுடியாதல்லவா. அந்த அடிப்படையில் சந்திரமுகி, எந்திரன் போன்ற படங்களும் ரஜினிக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன.

மக்கள் பிரச்சினை:
இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் புதிய படத்திற்கு பேட்ட எனப் பெயரிடப்பட்டுள்ளது. நிச்சயமாக இது அவரது கதாபாத்திரப் பெயராக இருக்க வாய்ப்பில்லை. சமீபகாலமாக தொடர்ந்து தனது படங்களில் மக்கள் பிரச்சினைகள் குறித்து குரல் எழுப்பி வருகிறார் ரஜினி. அந்தவகையில், இப்படமும் அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதாக அமையும் எனத் தெரிகிறது.

பேட்ட:
இது ஒருபுறம் இருக்க இதுவரை தனது படங்களுக்கு பீட்சா, ஜிகிர்தண்டா, இறைவி, மெர்குரி என வித்தியாசமான தலைப்புகளையே கார்த்திக் சுப்புராஜ் வைத்துள்ளார். ரஜினிக்காக தனது இந்த பெயர் சூட்டும் முறையை கார்த்திக் சுப்புராஜ் மாற்றிக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், வழக்கம்போல், இப்படத்திற்கும் தனது ஸ்டைலில் ‘பேட்ட' எனப் பெயரிட்டுள்ளார்.

பாட்ஷா ஸ்டைல்?
நிச்சயமாக இப்படம் ரசிகர்களுக்கு ஆக்சன் விருந்தளிக்கும் என்பது அதன் மோஷன் பிக்சர்ஸ் மூலமே உறுதியாகியுள்ளது. கத்தி, சிவப்பு என மோஷன் பிக்சர்ஸ் முழுவதும் ஆக்சனுக்கு உத்திரவாதம் அளிக்கிறது. இப்படத்தில் கல்லூரி பேராசிரியராக ரஜினி நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. எனவே, தர்மத்தின் தலைவன், பாட்ஷா பட வரிசையில் முதல் பாதியில் சாதுவாகவும், அடுத்த பாதியில் அதிரடி ஆக்சன் ஹீரோவாகவும் ரஜினி இப்படத்தில் நடிக்கிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











