LIK Box Office Day 2 - எல்ஐகே 2வது நாள் வசூல் இவ்வளவா?.. பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல ரெஸ்பான்ஸ்
சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் எல்ஐகே திரைப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் அவருடன் சீமான், எஸ்.ஜே.சூர்யா, க்ரித்தி ஷெட்டி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். ஓரளவுக்கு எதிர்பார்ப்புடன் வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பையே ரசிகர்களிடம் பெற்றிருக்கிறது. இந்நிலையில் படம் வெளியாகி இரண்டு நாட்களில் எத்தனை கோடி வசூல் செய்திருக்கிறது என்பது குறித்த பாக்ஸ் ஆஃபிஸ் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன்; நீண்ட வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்தார். மேலும் அவருக்கு கிடைத்த அஜித் பட வாய்ப்பும் கை நழுவி போனது. இதன் காரணமாக இனிமேல் விக்கியால் சினிமாவில் சர்வைவ் ஆக முடியாது என்றெல்லாம் ஆளாளுக்கு பேசினார்கள். ஆனால் அவர் உடனடியாக பிரதீப் ரங்கநாதனை வைத்து எல்ஐகே படத்தை இயக்குவதற்கு கமிட்டானார். அவருடன் சீமான், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோரும் நடிக்க கமிட்டானார்கள்.

நேற்று முன்தினம் ரிலீஸ்: படத்தின் வேலைகள் எப்போதோ முடிந்துவிட்டன. எனவே படம் இப்போது ரிலீஸ் ஆகும் அப்போது ரிலீஸ் ஆகும் என்று சொல்லி சொல்லி இழுத்தடிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் படம் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகமே எல்லோருக்கும் வந்துவிட்டது. ஆனால் ஒருவழியாக அத்தனை பிரச்னைகளும் சுமூகமாக தீர்க்கப்பட்டு நேற்று முன்தினம் படமானது திரையரங்குகளில் ஜோராக ரிலீஸானது. விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தங்கள் குழந்தைகளுடன் ரோகிணி தியேட்டரில் படம் பார்த்தார்கள்.
எப்படி இருக்கு படம்?: ரசிகர்களும் ஆர்வத்துடனேயே படம் பார்க்க சென்றார்கள். ஆனால் அவர்களை படம் முழுவதுமாக திருப்திப்படுத்தவில்லை. எடுத்துக்கொண்ட கதைக்களம் வித்தியாசமானதாகவும் புதுமையாகவும் இருந்தாலும்; அதை திரைக்கதையாக்கிய விதத்தில் விக்கி ரொம்பவே சொதப்பிவிட்டார் என்று கூறினார்கள் பலர். அதேபோல் சில க்ரிஞ்ச்தனமான காட்சிகளையும் வைத்து ஒப்பேத்தியிருக்கிறார் என சகட்டுமேனிக்கு விமர்சிக்கிறார்கள்.
படத்தின் ஆறுதல்: படத்தில் பல விஷயங்கள் உறுத்தலாக இருக்கின்றன. சிஜி வேலைகளில் மட்டும் நல்ல கவனம் செலுத்தியிருக்கிறார்கள். அதேபோல் அனிருத்தின் இசை ஓரளவுக்கு நன்றாக இருக்கிறது. குறிப்பாக ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட பிரதீப் ரங்கநாதனின் நடிப்பும், ஸ்டைலும் நன்றாக இருந்தாலும்; அப்படியே தனுஷை பார்த்தது மாதிரியே இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக இதுவரை அவர் ஹீரோவாக நடித்த மூன்று படங்களும் 100 கோடி ரூபாய் அள்ளியது. ஆனால் படத்துக்கு கிடைத்திருக்கிற ரெஸ்பான்ஸை பார்த்தால் அந்த வசூல் இந்தப் படத்துக்கு கிடைப்பது சந்தேகம்தான்.
இரண்டாவது நாள் வசூல்: இந்நிலையில் படம் வெளியான இரண்டாவது நாளான நேற்று படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சாக்நில்க் இணைந்தளம் வெளியிட்டிருக்கும் தகவல்படி தமிழில் அந்தப் படம் 6 கோடியே 20 லட்சம் ரூபாயையும், தெலுங்கில் ஒரு கோடியே 50 லட்சமும் என மொத்தம் 7 கோடியே 70 லட்சம் ரூபாயை வசூலித்ததாம். முதல் நாளில் அந்தப் படம் ஏழு கோடியே 5 லட்சம் ரூபாய்தான் எடுத்திருந்தது. நேற்று வசூல் கொஞ்சம் அதிகரித்திருக்கிறது. இது போகப்போக இன்னும் பிக்கப்பாகி பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த இணையதள தகவல்கள்படி மொத்தம் இப்படம் இரண்டு நாட்களில 15 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications















