என் கவிதையை திருடிவிட்டனர்: பிரகாஷ்ராஜ் குற்றச்சாட்டு
சென்னை: தன் அனுமதியில்லாமல் தன்னுடைய கவிதையை ஆகடு' படத்தில் இயக்குநர் சீனு வைட்லா பயன்படுத்தியிருக்கிறார் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராம்சரண்தேஜா, காஜல் அகர்வால் நடித்து சமீபத்தில் வெளியாகியிருக்கும் தெலுங்கு படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சனிக்கிழமையன்று ஹைதரபாத்தில் நடைபெற்றது.
இதில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், சென்ற மாதம் மகேஷ்பாபு, தமன்னா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் சீனு வைட்லா இயக்கத்தில் வெளியான ‘ஆகடு' படம் பற்றியும் அதில் தனது கவிதையை பயன்படுத்தியிருப்பதைப் பற்றியும் பேசினார்.

பிரகாஷ்ராஜ் நீக்கம்
ஆகடு' படத்தில் முதலில் பிரகாஷ்ராஜும் நடித்தார். ஒரு நாள் படப்பிடிப்பின்போது உதவி இயக்குநர் ஒருவரை தகாத முறையில் திட்டியதாக பிரகாஷ்ராஜ் மீது இயக்குநர் சீனு வைட்லா புகார் எழுப்பினார். தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்திலும் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. பின்பு ‘ஆகடு' படத்தில் பிரகாஷ்ராஜ் நீக்கப்பட்டார்.

மாறிய நடிகர்
பிரகாஷ்ராஜ்க்கு பதிலாக ஹிந்தி நடிகர் சோனு சூட் நடித்தார். இதனையடுத்து பிரகாஷ்ராஜ் இயக்குநர் சீனு வைட்லாவை கண்டித்தும், விமர்சித்தும் பேசினார். தன்னுடைய எதிர்ப்பை ஒரு கவிதை மூலமாகவும் தெரியப்படுத்தினார்.

பிரகாஷ் ராஜ் கவிதை
"என்னை கல்லால் அடிக்காதே...
அதை பிடித்துக்கொண்டு
வீடு கட்டி விடுவேன்.
என்னை எரித்து விட வேண்டுமென
தீ வைக்காதே ; வீட்டிற்கு விளக்காக்கி கொள்வேன்.
என்னை சினிமா துறையில் இருந்து
விரட்டிவிட வேண்டும் என எண்ணாதே..
நான் சேர வேண்டிய இடத்திற்கு
விரைவாக சேர்ந்து விடுவேன்.
தயவு செய்து சொல்கிறேன்..
என்னை கொல்ல விஷம் வைக்காதே...
விழுங்கி, நீலகண்டனாகி விடுவேன்..."
என்று கவிதை வடிவில் இயக்குநர் சீனு வைட்லாவை கண்டித்திருந்தார். இந்த நிலையில் பிரகாஷ்ராஜின் இந்தக் கவிதையை, ‘ஆகடு' படத்தில் அவருக்கு பதிலாக நடித்த இந்தி நடிகர் சோனுசூத் என்பவர் பேசுவது போல காட்சி இடம் பெற்று இருந்தது.

சூடேற்றிய ஆகடு
இதைக் கேள்விப்பட்டு பிரகாஷ்ராஜ் இன்னும் சூடாகிப் போனார். இது குறித்து ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ‘தெலுங்கு படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ்ராஜ் அந்தப் படத்தைவிட்டுவிட்டு ‘ஆகடு' படம் பற்றியே பேசித் தீர்த்தார் பிரகாஷ்ராஜ்.

நான் வேண்டாம் கவிதை வேண்டுமா?
"என்னை படத்தில் இருந்து நீக்கிய டைரக்டர் எனது அனுமதியின்றி எனது கவிதையை மட்டும் எப்படி உபயோகிக்கலாம்? அது கவிதை அல்ல. எனது வேதனை. கவிதை பிடித்திருந்ததால் உபயோகித்ததாக டைரக்டர் கூறுவது கொடுமை. எனது அனுமதியுடன்தான் அதை பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆகடு படம் தோல்வி அடைந்தால் அதற்கு டைரக்டர்தான் காரணம்.

மகேஷ்பாபு படம்
நடிகர் மகேஷ்பாபுவின் படத்திற்கு மக்களிடம் நிறைய எதிர்பார்ப்பு இருக்கும். அனைவருடைய எதிர்பார்ப்பையும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இயக்குனரைச் சார்ந்தது. ஆனால் அதில் இருந்து இயக்குநர் சீனு வைட்லா தவறி விட்டார். அவர் தனது அகங்காரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்..." என்று சீறித் தள்ளிவிட்டார் பிரகாஷ்ராஜ்.


Click it and Unblock the Notifications











