மீண்டும் ஃபார்முக்கு வந்த பிரசாந்த்.. சூர்யாவுடன் இணைகிறாரா?.. அட செமயா இருக்குமே
சென்னை: கோலிவுட்டின் டாப் ஸ்டார் என்று அழைக்கப்படும் பிரசாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவர் ஹீரோவாக நடித்த அந்தகன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது விஜய்யுடன் சேர்ந்து நடித்த GOAT படத்திலும் பிரசாந்த்தின் நடிப்புக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர். இதன் காரணமாக அவரும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் பிரசாந்த்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வந்தவர். தியாகராஜனின் மகனான இவர் வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே மெகா ஹிட்டானது. அழகும், திறமையும் ஒருசேர இருந்ததாலும்; முதல் படமே மெகா ஹிட்டானதாலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவருக்கு தொட்டதெல்லாம் ஹிட் படங்களாக அமைந்தன. இதனால் பல ஊர்களில் பிரசாந்த்துக்கென்று ரசிகர் மன்றங்கள் முளைக்கத் தொடங்கின.

திருடா திருடா: அதனையடுத்து பாலுமகேந்திராவின் இயக்கத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்த பிரசாந்த் மணிரத்னம் இயக்கத்தில் திருடா திருடா படத்தில் நடித்தார். பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார். குறிப்பாக இப்போது டாப் ஸ்டார்களாக இருக்கும் விஜய், அஜித் ஆகியோரைவிடவும் உயர்ந்த நிலையில் 90களில் இருந்தவர் பிரசாந்த். சொல்லப்போனால் அவருக்கு நேரமும், சூழ்நிலையும் ஒழுங்காக இருந்திருந்தால் இன்று விஜய்யோ, அஜித்தோ இருவரின் ஒரு இடத்தை அவர்தான் அலங்கரித்திருப்பார்.
சறுக்கல்: இப்படி உச்சத்தில் சென்றுகொண்டிருந்த பிரசாந்த்துக்கு சில சறுக்கல்கள் ஏற்பட்டன. அதற்கு முக்கிய காரணம் அவரது மனைவிக்கும் அவருக்கும் நடந்த பிரச்னைதான் என கூறப்படுகிறது. மேலும் அந்த பிரச்னையில் கவனம் செலுத்தியதால் சினிமாவில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை எனவே வாய்ப்புகள் குறைந்துபோயின என்ற கூற்றும் உண்டு. மனைவி பிரச்னை மட்டுமின்றி பிரசாந்த்தின் வாழ்க்கையில் தந்தையின் தலையீடு அதிகம் இருந்ததாலும் பிரசாந்த் பாதியிலேயே காணாமல் போய்விட்டார் என்றும் திரைத்துறையில் பேச்சு உண்டு.
ரீ என்ட்ரி: பல வருடங்கள் ஒதுங்கியிருந்த பிரசாந்த் அந்தகன் ஹீரோவாக ரீ எண்ட்ரி கொடுத்தார். அவரது தந்தை தியாகராஜன் இயக்கியிருந்த அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையே GOAT படத்தில் நடிப்பதற்கும் கமிட்டானார். ஒருபக்கம் வெங்கட் பிரபு - விஜய் முதன்முறையாக கூட்டணி அமைத்தது எதிர்பார்ப்பை எகிற வைக்க; மறுபக்கம் விஜய்யுடன் பிரசாந்த் நடிப்பதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக விஜய் ஃபீல்டுக்குள் வந்தபோது பிரசாந்த் உச்ச நடிகராக இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
நடிப்புக்கு வரவேற்பு: பிரசாந்த்துக்கு படத்தில் முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. அவரை திரையில் பார்க்கும்போதும் தியேட்டர்களில் விசில்கள் பறந்தன. இதன் மூலம் அவருக்கான கிரேஸ் இன்னமும் குறையவில்லை என்று கோலிவுட் உணர்ந்துகொண்டது. படத்தில் பிரசாந்த்தின் நடிப்பை பார்த்த பலர்; செமயாக நடித்திருக்கிறார். இனி பிரசாந்த் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.
அடுத்த படம்: இந்நிலையில் பிரசாந்த்தின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி சூர்யாவை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் படத்தில் பிரசாந்த் முக்கியமான ரோலில் நடிக்கவிருப்பதாகவும்; GOAT படம் போலவே இந்தப் படத்திலும் அவரது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கோலிவுட்டில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் டாப் ஸ்டார் ஃபுல் ஃபார்மில் இருக்கிறார் போல என மகிழ்ச்சியுடன் கூறிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











