96 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்தாரா பிரதீப் ரங்கநாதன்?.. டென்ஷனாகி பிரேம் வைத்த கோரிக்கை
சென்னை: பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த லவ் டுடே, டிராகன் ஆகிய இரண்டு படங்களும் வரிசையாக ஹிட்டடித்திருக்கின்றன. அதுவும் அந்த இரு படங்களுமே நூறு கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்திருக்கிறது. அடுத்ததாக அவரது நடிப்பில் LIK, ட்யூட் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகவிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க 96 படத்தின் இரண்டாவது பாகத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க மறுத்துவிட்டதாக வெளியான தகவலை கேட்டு 96 இயக்குநர் பிரேம் உச்சக்கட்ட டென்ஷனாகியிருக்கிறார்.
ரவி மோகனை வைத்து கோமாளி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அந்தப் படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பைதான் பெற்றுக்கொடுத்தது. அடுத்ததாக ஏஜிஎஸ் பேனரில் லவ் டுடே திரைப்படத்தை இயக்கி ஹீரோவாக நடித்தார் பிரதீப். அவரெல்லாம் ஹீரோவா என்றுதான் பலரும் முதலில் பேசினார்கள். ஆனால் அந்தத் திரைப்படம் இளைஞர்களை குறிப்பாக 2K கிட்ஸை வெகுவாக கவர்ந்துவிட்டதால் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
டிராகன் பிரதீப் ரங்கநாதன்: லவ் டுடே படத்தை முடித்த அவர் அடுத்ததாக தனது கல்லூரி சீனியர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்தார். அந்தப் படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனம்தான் தயாரித்தது. முதன்முறையாக பிரதிப்பும், அஸ்வத்தும் இணைந்ததால் இந்தப் படத்தின் மீது ஓரளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்தது. அதேபோல் ட்ரெய்லரை பார்த்த பலரும் இது டான் படத்தின் இரண்டாவது பாகம் என்றும் ட்ரோல் செய்ய ஆரம்பித்தார்கள்.
சம்பவம் செய்த டிராகன்: ஆனால் படத்தை பார்த்த பிறகு ரசிகர்கள் வாயடைத்து போய்விட்டார்கள். சமூகத்துக்கு தேவையான ஒரு கருத்தை எந்தவொரு பிரசார தொனியும் இல்லாமல் இளைஞர்களை கனெக்ட் செய்யும் விதத்தில் இயக்குநர் படமாக்கிவிட்டார் என்று கொண்டாடினார்கள். அதன் பலனாக படம் மெகா ஹிட்டானது. முக்கியமாக லவ் டுடே படத்துக்கு பிறகு தொடர்ச்சியாக 100 கோடி ரூபாய்க்கும் மேல் டிராகன் படம் வசூலித்து பிரதீப்பின் மார்க்கெட்டை உச்சத்தில் நிறுத்தியது.

பிரதீப்பை அணுகிய பிரேம்?: சூழல் இப்படி இருக்க 96, மெய்யழகன் ஆகிய படங்களின் இயக்குநர் பிரேம்குமார் 96 படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார். ஆனால் அப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஆர்வம் காட்டவில்லை என்று முதலில் தகவல் வெளியானது. அடுத்ததாக, பிரதீப் ரங்கநாதனை இந்தப் படத்தில் நடிக்க வைக்க அவர் திட்டமிட்டு அணுகியதாகவும்; ஆனால் பிரதீப் 96 பார்ட் 2வில் நடிக்க மறுத்துவிட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின.
டென்ஷனான பிரேம்: இந்நிலையில் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரேம்குமார், "இது வழக்கம்போல் ஒரு பொய்யான, தவறான செய்தி., 96 படத்தில் நடித்த நடிகர்களை வைத்து மட்டும்தான் அந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க முடியும். பிரதீப் ரங்கநாதனை நான் அணுகியது உண்மை. ஆனால் அது வேறு ஒரு கதைக்காக. அதற்கும் 96 பார்ட் 2வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாளுக்கு நாள் பெருகி பெரிய தீங்குகளை விளைவிக்கும் இந்த மாதிரியான பொய் செய்திகளை கையாள்வது உண்மையில் பெரிய கடினமாக இருக்கிறது. இதன் மூலம் உண்மையை சொல்ல வேண்டுமென அறம் சார்ந்த அச்சு, ஊடக நண்பர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
பிரதீப்பின் லைன் அப்: பிரதீப் ரங்கநாதனை பொறுத்தவரை இப்போது அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK படத்திலும், கீர்த்திஸ்வரன் இயக்கத்த்ல் ட்யூட் படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களுமே இவ்வருடத்திலேயே ரிலீஸாகவிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











