அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
சென்னை: விஜய்யும், அஜித்தும் இணைந்து ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்தனர். அதன் பிறகு இரண்டு பேருமே சேர்ந்து நடிக்கவில்லை. இருந்தாலும் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்களின் விருப்பமாகவே இருக்கிறது. ஆனால் இரண்டு பேருமே அதை ஏனோ சில காரணங்களால் தவிர்த்துவருகின்றனர். இந்தச் சூழலில் ராஜாவின் பார்வையிலே படத்தில் அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிப்பதற்கு எஸ்.ஏ.சந்திரசேகர் கண்டிஷன் போட்டதாக தயாரிப்பாளர் சௌந்தர பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.
இந்திய சினிமாவில் அஜித்தும், விஜய்யும் டாப் ஹீரோக்கள் லிஸ்ட்டில் இருக்கின்றனர். இருவரும் ஒரேகாலகட்டத்தில் நடிக்க வந்தவர்கள். அதேபோல் தங்களது ஆரம்பகாலத்தில் நிலையான இடத்தை பிடிப்பதற்கு கடுமையாக போராடியவர்கள். விஜய் உருவ கேலியை சந்தித்தார் என்றால்; ஒழுங்காக தமிழே பேசவரவில்லை, எமோஷன் காட்சிகளில் நடிக்க தெரியவில்லை, நடனம் தெரியவில்லை போன்ற விமர்சனங்களையும் கேலிகளையும் அஜித் சந்தித்தார்.

ராஜாவின் பார்வையிலே: இரண்டு பேரும் இப்போது இருக்கும் இடம் சாதாரணமாக அவர்களுக்கு கிடைக்கவில்லை. அயராது உழைத்து, தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டனர். அதன் பிரதிபலனாக இருவருமே இப்போது சூப்பர் ஸ்டார்களாக இருக்கின்றனர். 90களில் நடிக்க வந்த அஜித்தும், விஜய்யும் ஆரம்பத்தில் ராஜாவின் பார்வையிலே படத்தில் இணைந்து நடித்தனர். அதற்கு பிறகு நேருக்கு நேர் படத்தில் நடிக்க அஜித் கமிட்டானார். ஆனால் சில காரணங்களால் பாதியில் படத்திலிருந்து வெளியேறினார்.
அஜித் Vs விஜய்: அதற்கு பிறகு இருவரையும் சேர்த்து படம் எடுக்க யாருமே முயற்சிக்கக்கூடவில்லை. அதேசமயம் இருவரும் தங்களது பாதையில் சிறப்பாக செல்ல இருவருமே உயர்ந்த இடத்துக்கு சென்றனர். இதனால் ரஜினி - கமல் என்பது போல் அஜித் - விஜய் என உருவானது. இருவருக்குமே ரசிகர்கள் பெருக இரண்டு பேரின் படமும் ஒரே நாளில் ரிலீஸானால் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. அதுமட்டுமின்றி ரசிகர்களுக்குள்ளும் மோதல் ஆரம்பித்தது. கடைசியாக விஜய்யின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் வெளியானது. இதில் துணிவு படம் வெற்றி பெற்றதாகவே பலரும் கூறினார்கள்.
ஆசைப்பட்ட விஜய்: இரண்டு பேருக்கும் போட்டி என்ற நிலைதான் இருந்தாலும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளுக்குள் ஆசை இருப்பதாகவே தெரிகிறது. அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தை பார்த்துவிட்டுக்கூட வெங்கட் பிரபுவிடம் பேசிய விஜய்; என்னிடம் சொல்லியிருந்தால் அர்ஜுன் கேரக்டரை நானே நடித்திருப்பேன் என சொல்லியிருக்கிறார். இதனை வெங்கட் பிரபுவே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சௌந்தர பாண்டியன் பேட்டி: இந்நிலையில் ராஜாவின் பார்வையிலே படத்தின் தயாரிப்பாளர் சௌந்தர பாண்டியன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "ராஜாவின் பார்வையிலே படத்தின்போது அஜித்தும், விஜய்யும் வளரும் இளம் நடிகர்கள். அஜித் எனக்கு நெருங்கிய நண்பர். அதன் காரணமாக அந்தப் படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துக்கொடுத்தார் அவர். பிறகு விஜய்யை நடிக்க வைக்க முடிவு செய்து பேச்சுவார்த்தையை தொடங்கினோம். அப்போது எஸ்.ஏ.சந்திரசேகர், இந்தப் படத்தில் விஜய் நடிக்க வேண்டுமென்றால் இளையராஜாவை இசையமைக்க வையுங்கள் என்று சொன்னார். பிறகு இளையராஜாவை இசையமைக்க வைத்தோம். விஜய்யும் படத்தில் நடித்தார்" என்றார்.
விஜய், அஜித் படங்கள்: விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். படமானது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகிறது. அதேபோல் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். இதற்கிடையே விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருப்பதும்; இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











