Vijayakanth - நான் இப்படி இருப்பதற்கு விஜயகாந்த்தான் காரணம்..மகன் இடத்தை நிரப்பியவர்..புலியூர் சரோஜா எமோஷனல்
சென்னை: கேப்டன், புரட்சி கலைஞர் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். பல உதவிகளை செய்திருக்கும் அவர் நடிகராக மட்டுமின்றி தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்திருக்கிறார். ஒருகட்டத்தில் உடல்நலக்குறைவால் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார். இந்தச் சூழலில் பிரபல நடன அமைப்பாளராக இருந்த புலியூர் சரோஜா விஜயகாந்த் குறித்து எமோஷனலாக பேசியிருக்கிறார்.
கேப்டன் விஜயகாந்த்: விஜயகாந்த்தின் படங்கள் அனைத்தும் வரிசையாக ஹிட்டடித்தன. அதன் காரணமாக ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் என்ற வரிசை தமிழ் சினிமாவில் உருவானது. சொல்லப்போனால் கிராமத்து பகுதிகளில் ரஜினி, கமல் ஹாசனைவிடவும் அதிக மவுசு விஜயகாந்த்துக்கு இருந்தது என்பதுதான் யதார்த்தமான உண்மை.

நடிகர் சங்க தலைவர்: நடிகராக மட்டுமின்றி நடிகர் சங்க தலைவராகவும் பொறுப்பேற்று அதனையும் திறம்பட கையாண்டார். கடனில் இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தை அவர்தான் அதிலிருந்து மீட்டார். மேலும் அனைத்து நட்சத்திரங்களையும் ஒன்றிணைத்து சிங்கப்பூர், மலேசியா சென்று கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினார் அவர். அதுமாதிரி இன்றுவரை ஒன்று நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் என்ட்ரி: நடிகர், நடிகர் சங்க தலைவர் என பிஸியாக இருந்த அவர் அரசியலில் நுழைந்து எதிர்க்கட்சி தலைவராகவும் மாறினார். ஆனால் இடையில் அவர் எடுத்த சில தவறான முடிவுகள், உடல்நலக்குறைவு ஆகியவை காரணமாக சறுக்கலை சந்தித்தார். பிறகு அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த வருடம் டிசம்பர் மாதம் உயிரிழந்தார்.
விஜயகாந்த்தின் கரங்கள் ஏகப்பட்ட பேருக்கு உதவியிருக்கின்றன அந்த உதவியின் காரணமாக நன்றாக வாழ்ந்துகொண்டிருக்கும் சாமானியர்கள் முதல் செலிபிரிட்டிகள்வரை அதிகம் பேர் இருக்கிறார்கள். அந்த செலிபிரிட்டிகளில் ஒருவர்தான் விஜய். விஜய் மட்டுமின்றி சூர்யா, ஷாம் என பலருக்கும் பிரச்னை வந்தபோது முதல் ஆளாக களத்தில் இறங்கி தன்னால் முடிந்த உதவியை செய்துகொடுத்தவர். ஹீரோக்களை மட்டும் கவனிக்காமல் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்காகவும் அவர் பல உதவிகளை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
புலியூர் சரோஜா எமோஷனல்: இந்நிலையில் 80கள் மற்றும் 90களில் பிரபல நடன அமைப்பாளராக இருந்த புலியூர் சரோஜா விஜயகாந்த் குறித்து எமோஷனலாக பேசியிருக்கிறார். அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில், "நான் இப்படி நலமுடனும், நல்ல மனநிலையுடனும் இருப்பதற்கு விஜயகாந்த்தான் காரணம். அவர் நடித்த ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோதுதான் எனது மகன் உயிரிழந்துவிட்டார். எனது மகனின் உயிரிழப்பு என்னை ரொம்பவே பாதித்துவிட்டது.
விஜயகாந்த்தான்: மனரீதியாக நான் அநியாயத்துக்கு நொறுங்கி போயிருந்தேன். அந்த சமயத்தில் எல்லாம் விஜயகாந்த்தான் என்னை பார்த்துக்கொண்டார். அக்கா நீங்க டான்ஸ் சொல்லிக்கொடுங்க க்கா என்று என்னுடைய கவனத்தை பல வழிகளில் திசை திருப்பினார். நாகர்கோவிலுக்கு ஒரு ஷூட்டிங்கிற்கு அழைத்து சென்று தனிமையான ஒரு இடத்தில் கடலுக்குள் அமர வைத்து அழைத்து வந்தார். மேலும் நீங்களும், மாமாவும் (புலியூர் சரோஜாவின் கணவர்) எப்போது வேண்டுமானாலும் எனது வீட்டுக்கு வரலாம். ஒரு மகனாக நான் இருக்கிறேன் என்று சொல்லி தேற்றினார்.
அவரை பார்க்கும்போதெல்லாம் எனது மகனை பார்க்கும் நியாபகம்தான் வரும். பல உதவிகளை அவர் எனக்கு செய்திருக்கிறார். நான் கட்டிய பள்ளிக்கூடத்துக்குக்கூட, அக்கா நான் வந்துதான் திறந்து வைப்பேன் என்று உரிமையாக சொல்லி சொன்னபடியே வந்து திறந்தும் வைத்தார். முக்கியமாக அந்தப் பள்ளிக்கூடத்துக்கு பெரிய தொகை ஒன்றையும் நன்கொடையாக அவர் வழங்கினார்" என்றார்.


Click it and Unblock the Notifications











