அஜித்தின் 65ஆவது படம்.. இயக்கப்போவது அந்த மெகா ஹிட் பட இயக்குநரா?.. நடந்தா நல்லா இருக்கும்
சென்னை: அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்த அந்தப் படம் ஏகே ரசிகர்களிடம் மெகா ஹிட்டானாலும் பொதுவான ரசிகர்களை கவரவில்லை. படம் முழுக்க பழைய அஜித் படங்களின் ரெஃபரன்ஸை வைத்து ஒப்பேத்திவிட்டார்கள் என்கிற விமர்சனத்தை பலரும் முன்வைத்தார்கள். ஆனால் வசூல் ரீதியாக படம் சக்கைப்போடு போட்டிருக்கிறது. இந்நிலையில் அஜித்தின் 65ஆவது படத்தை இயக்கப்போகும் இயக்குநர் குறித்த தகவல்கள் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கின்றன.
இந்திய சினிமாவில் டாப் 15 இடங்களுக்குள் இருப்பவர் அஜித்குமார். அவரது நடிப்பில் இந்த வருடம் மட்டும் இரண்டு படங்கள் வெளியாகியிருக்கின்றன. முதலில் வெளியான விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருந்தார். பெரிய எதிர்பார்ப்புடன் படம் வெளியானது. ஆனால் படுதோல்வியை சந்தித்தது. முக்கியமாக படத்தில் அஜித்துக்கான மாஸ் சீன்களே இல்லையே என்று அவரது ரசிகர்கள் ரொம்பவே நொந்துகொண்டார்கள்.

குட் பேட் அக்லி: அந்தப் படம் ரிலீஸான சில மாதங்களிலேயே குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. அப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இதில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். மேலும் பிரபு, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். விடாமுயற்சியில் இருந்த குறைகள் எல்லாம் இந்தப் படத்தில் நிவர்த்தி செய்யப்பட்டிருக்கும் என்ற ஆர்வத்தோடு ஏகே ரசிகர்கள் படம் பார்க்க சென்றார்கள்.
ஏகே ரசிகர்களுக்கு திருப்தி: அந்த ஆர்வத்தோடு சென்ற அவர்களுக்கு படம் முழு திருப்தியை கொடுத்தது. அஜித்தை இப்படிப்பட்ட மாஸாக பார்த்து நீண்ட காலம் ஆகிவிட்டது. தான் அஜித்தின் வெறித்தனமான ரசிகன் என்பதை படத்தின் ஒவ்வொரு சீனிலும் ஆதிக் நிரூபித்திருக்கிறார் என்று ரசிகர்கள் உற்சாகமடைந்தார்கள். அதேபோல் ஆதிக்கின் மேக்கிங்கும் தரமாக இருந்தது; ஏகப்பட்ட மாஸ் சீன்கள் இடம்பெற்றிருக்கின்றன என மகிழ்ச்சியோடு தெரிவித்தார்கள்.
ஓவர் டோஸான விஷயம்: அதேசமயம் அஜித் ரசிகர்களுக்கு படம் பிடித்திருந்தாலும்; பொதுவான ரசிகர்களுக்கு படம் திருப்தியை தரவில்லை. தேவையில்லாமல் ரெட்ரோ பாடல்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். பழைய அஜித் படங்களின் ரெஃபரன்ஸ்கள் ஓவர் டோஸாகிவிட்டன; இந்த மாதிரி படங்கள் வருவது தமிழ் சினிமாவுக்கு நல்லதல்ல என்ற விமர்சனத்தையும் அதிகமாகவே கேட்க முடிந்தது. அதுமட்டுமின்றி இனி தமிழ் சினிமா கதையோடு வராதா என்ற கேள்வியையும் பலர் முன்வைத்தார்கள்.
அஜித்தின் கார் ரேஸ்: இதற்கிடையே கார் ரேஸிலும் தீவிர கவனம் செலுத்திவருகிறார் அஜித். தொடர்ந்து தனது அணியுடன் ரேஸில் பங்கேற்கும் அவர் பரிசுகளையும் வென்றுவருகிறார். கார் பந்தயம் நடக்கும் சமயங்களில் திரைப்படங்களில் கமிட்டாகமாட்டேன் என்றும் சொல்லிவிட்டார். சூழல் இப்படி இருக்க அவரது 64ஆவது படத்தை ஆதிக் ரவிச்சந்திரனோ இல்லை கார்த்திக் சுப்புராஜோ இயக்கலாம் என்ற பேச்சுக்கள் ஓட ஆரம்பித்திருக்கின்றன.
ஏகே 65 இயக்குநர்?: இந்நிலையில் அஜித்தின் 65ஆவது படத்தை இயக்கப்போகும் இயக்குநர் தொடர்பான தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அல்லு அர்ஜுனை வைத்து புஷ்பா, புஷ்பா 2 ஆகிய இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்த சுகுமார்தான் ஏகே 65 படத்தை இயக்கப்போகிறார் என்றும்; விரைவில் அஜித்தை சந்தித்து அவர் கதை சொல்லப்போகிறார் என்றும் கோடம்பாக்கத்தில் குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











