போடு வெடிய.. விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ரஜினி பட ஹீரோயின்.. வேற லெவல்ல இருக்குமே
சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. எந்த கேரக்டரை அவர் ஏற்று நடித்தாலும் அதில் அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிடுவார். அதனால் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தற்போது மிஷ்கின் மற்றும் பாண்டிராஜ் ஆகியோரின் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் அவர்; அடுத்ததாக தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
சினிமாவில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று பலரும் முட்டி மோதுவதுண்டு. அந்த வெற்றியை பெறுவதற்கு பொறுமை, திறமை, விடாமுயற்சி வேண்டுமென்பதற்கு விஜய் சேதுபதிதான் மிகச்சிறந்த உதாரணம். சினிமாவில் கிடைத்த சின்ன சின்ன வாய்ப்புகளைக்கூட உதாசீனப்படுத்தாமல் பொறுமையாக இருந்து தனது திறமையை வளர்த்துக்கொண்டவர் அவர். அந்தப் பொறுமைக்கும், திறமைக்கும் மதிப்பாக தென்மேற்கு பருவக்காற்று படத்தில் அவருக்கு ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது.
தொடர் ஹிட்டுகள்: அந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக விஜய் சேதுபதிக்கு நல்ல பெயர் கிடைத்தது. பெயர் மட்டுமில்லாமல் அந்தப் படத்துக்கு பிறகு ஹீரோவாகும் வாய்ப்புகளும் கிடைத்தன. அதிலும் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியிலிருந்து சினிமாவுக்கு வந்த கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி தரணிதரன், நலன் குமாரசாமி உள்ளிட்டோர் எல்லாம் முதல் படத்தில் விஜய் சேதுபதியை ஹீரோவாக நடிக்க வைத்தார்கள். அப்படி அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டாகின.

முன்னணி ஹீரோ: தொடர்ந்து ஹிட்டுகள் கொடுத்ததன் காரணமாக விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக மாறிவிட்டார். நிலைமை இப்படி இருக்க வில்லனாகவும் நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் பேட்ட, மாஸ்டர், விக்ரம், ஜவான் என வில்லன் ரோலினை ஏற்று அதிலும் தனி முத்திரை பதித்தார். ஆனால் வில்லனாக மட்டுமே நடிக்கக்கூடாது ஹீரோவாகவும் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்துக்கொண்டே இருந்தனர்.
மகாராஜா விஜய் சேதுபதி: ரசிகர்களின் கோரிக்கைப்படி மீண்டும் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று கூறி அந்த வழியில் பயணிக்கிறார் சேது. அப்படி தனது 50ஆவது படமான மகாராஜாவில் ஹீரோவாக நடித்து மெகா ஹிட்டை கொடுத்துவிட்டார். இந்தியா மட்டுமின்றி உலகளவில் அந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சீனாவில் எல்லாம் அந்தப் படம் வசூல் வேட்டை நடத்தி விஜய் சேதுபதியின் மார்க்கெட்டை மீண்டும் உச்சத்துக்கு கொண்டு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த படம்: தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படத்திலும், பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இரண்டு படங்கள் மீதுமே ரசிகர்களுக்கு ஆவல் இருக்கிறது. அடுத்ததாக தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். அவர் பூரியின் இயக்கத்தில் கமிட்டானதைத் தொடர்ந்து பலரும் அவரை ட்ரோல் செய்தார்கள். ஆனால் அதை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை சேது. இந்நிலையில் அந்தப் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
ராதிகா ஆப்தே ஹீரோயின்: அதன்படி அப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இவர் தமிழில் ரஜினியுடன் கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது சேதுவுக்கு அவர் ஜோடியாகவிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவலால் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











