ஹீரோ .. ஹீரோ ..
பாபா படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் புயல் வேகத்தில் நடந்து வருகின்றன. இதோ ஒரு அப்டேட்.
ரஜினிக்குச் சொந்தமான நட்சத்திர ஹோட்டலில் கதை டிஸ்கஷன் தீவிரமாக நடந்து வருகிறது. ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் கலந்து கொண்டு பல டிப்ஸ்களைத் தருகிறாராம். அவர் இதில் இணை இயக்குனராகலாம் என்று தெரிகிறது.
பிரகாஷ் ராஜ் முக்கிய ரோல் ஒன்றில் நடிக்கிறார். முதலில் சத்யராஜ்தான் இதற்காக கேட்கப்பட்டாராம். ஆனால், சத்யராஜ் மறுத்து விட்டாராம்.
மனீஷா கொய்ராலா ஹீரோயினாக நடிக்கிறார். இன்னொரு நாயகியாக உள்ளூர் சங்கவியும், ஜப்பானின் முன்னணி நடிகையும் நடிக்கிறார்களாம். ஜப்பானில் ரஜினிக்கு மார்க்கெட் உள்ளதால் ஜப்பானிய நடிகை ஒருவரையும் நடிக்க வைக்கிறார்களாம்.
வழக்கம் போல செந்திலும் படத்தில் இருக்கிறார். அவருடன், கவுண்டமணியும் நடிக்கிறார். கவுண்டமணிக்கு இதுவரை வழங்காத அளவுக்கு பெரிய சம்பளம் வழங்கப்பட உள்ளதாம்.
படத்திற்கு வசனங்களை பாலகுமாரன் எழுதுகிறார். காமடிக்கு வேறு ஒருவர் எழுதலாமாம். கலைஞர் கூர் தீட்டித் தரவும் முன் வந்துள்ளார்.
கவியரசு வைரமுத்துவின் பாடல்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
ரஜினியின் சொந்த மாநிலமான கர்நாடகத்தைச் சேர்ந்த முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவப்பாவின் உறவினரும், பெங்களூரைச் சேர்ந்த பிரபல கன்னட தொழிலதிபருமான முக்கியப் புள்ளி தான் இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளர். ஊர் பாசம்.. ஊர் பாசம் தான்!
படத்தில் அரசியல் மருந்துக்குக் கூட இருக்காதாம். ஆனால் ரஜினியின் ரசிகர்கள் எதிர்பார்க்கும் நறுக் வசனங்கள் நிறையவே இருக்குமாம்.
படத்தின் முக்கால்வாசி காட்சிகளும் சென்னையிலேயே படமாக்கப்பட உள்ளன. சில காட்சிகள் மட்டும் மைசூர் போன்ற வெளிமாநிலப் பகுதிகளில் எடுக்கப்படவுள்ளன. ரஜினி படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் தான் நடப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் படப்பிடிப்பு முழுவதும் கிண்டியில் உள்ள கேம்பகோலா மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு செட்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.
24ம் தேதி காலை 10 மணிக்கு ஏவி.எம். ஸ்டுடியோவில் உள்ள விநாயகர் கோவிலில் ரஜினி சாமி கும்பிடுவது போன்ற காட்சியுடன் படப்பிடிப்பு துவங்குகிறது. அதன் பிறகு கேம்பகோலா மைதானத்தில் மற்ற காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. படப்பிடிப்பை வேக வேகமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











