»   »  அமிதாப்புக்குப் பதில் ஷம்மி!

அமிதாப்புக்குப் பதில் ஷம்மி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்தி சிவாஜியில், அமிதாப் பச்சன் போல நடிக்க ரஜினி காந்த் மறுத்து விட்டாராம்.

பெரும் சாதனை படைத்த சிவாஜி தற்போது இந்திக்குப் போகிறது. டப் ஆகித்தான் அங்கு போகிறது என்றாலும் கூட சில முக்கியக் காட்சிகளை ரீ ஷூட் செய்து புதிதாக எடுக்கிறார்கள். இதில் நடித்துக் கொடுக்க ரஜினியும் ஒத்துக் கொண்டு கால்ஷீட் கொடுத்துள்ளார்.

இடைவேளைக்கு முந்தைய சில சண்டைக் காட்சிகள் உள்பட சில முக்கியக் காட்சிகளை இந்தி ரசிகர்களின் டேஸ்ட்டுக்கேற்ப மாற்றி எடுக்கவுள்ளனர்.

இந்தியிலும் ரஜினி தனது சொந்தக் குரலிலேயே பேசுகிறார். கிட்டத்தட்ட 30 ஆண்டு கால திரையுலக வரலாற்றில் முதல் முறையாக ரஜினி ஒரு டப்பிங் படத்திற்கு அவரே குரல் கொடுக்கிறார்.

இந்தி ரசிகர்களுக்காக புதிதாக ஒரு பாடலை ஷூட் செய்யவுள்ளனர். ஒரிஜினல் சிவாஜியில், எம்.ஜி.ஆர். சிவாஜி, கமல் போல இமிட்டேட் செய்து ஒரு பாடல் காட்சியில் ரஜினி நடித்திருந்தார்.

இதே பாடைல இந்தி ரசிகர்களுக்காக மாற்றி எடுக்கின்றனர். இந்தியில் தேவ் ஆனந்த், ஷம்மி கபூர், ஷாருக்கான் போல ரஜினி வேடமிட்டு கலக்கப் போகிறார். முதலில் அமிதாப் பச்சன் போல நடிப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ரஜினி, அது வேண்டாம் என்று கூறி விட்டாராம்.

அமிதாப் மீது நான் மட்டுமல்ல, எண்ணற்ற வடக்கிந்திய ரசிகர்களும் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். எனவே அமிதாப்பை இமிடேட் செய்து நடித்தால் தேவையில்லாத சிக்கல்கள் ஏற்பட்டு விடலாம். எனவே அமிதாப் வேண்டாம் என்று ரஜினி கூறியதால் ஷம்மி கபூரை சேர்த்துள்ளனர்.

தேவ் ஆனந்த், சாதனா போல, ரஜினியும், ஷ்ரியாவும் ஆடிப் பாடவுள்ளனர். இந்தப் பாடல் கருப்பு வெள்ளையில் ஆரம்பித்து பின்னர் கலருக்கு மாறுமாம்.

பாடலின் இரண்டாவது பாதியில் ஷம்மி கபூர், சாய்ரா பானு போல ரஜினி, ஷ்ரியா வருகின்றனர். 3வது பாதியில், ஷாருக்கான், கஜோல் போல ரஜினியும், ஷ்ரியாவும் பாடுகின்றனர். தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே படத்தில் வரும் பாடலை இந்தப் பகுதியில் பயன்படுத்தவுள்ளனர்.

இந்திப் பதிப்பு சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக ரஜினியே நிறைய டிப்ஸ்கள் கொடுத்துள்ளாராம். இது இயக்குநர் ஷங்கருக்கு பேருதவியாக உள்ளதாம்.

இதுகுறித்து ஏவி.எம். நிறுவன தலைமை செயல் அதிகாரி பாபுவிடம் கேட்டபோது, ஹிந்தி டப்பிங் குறித்த எங்களது யோசனையை சூப்பர் ஸ்டாரிடம் கூறியபோது, ரஜினி சார் மிகவும் சந்தோஷமாகி விட்டார். நிறைய ஐடியாக்களைக் கொடுத்தார். இப்போது முற்றிலும் புதிய படமாக ஹிந்தி சிவாஜி மாறியுள்ளது.

சூப்பர் ஸ்டாரின் குரலிலேயே இப்படம் உருவாகவிருப்பதால் தமிழைப் போலவே இந்தியிலும் நிச்சயம் இப்படம் பெரும் ஹிட் ஆகும். எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் ரஜினி சாருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம் என்றார்.

சிவாஜி என்ற பெயரிலேயே இந்தியிலும் ரிலீஸ் செய்கின்றனர். தீபாவளிக்கு முன்பாக அல்லது தீபாவளிக்குப் பின்பு இந்தி சிவாஜி வெளியாகுமாம்.

Read more about: rajini

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil