புதன்கிழமை சென்னை திரும்புகிறார் ரஜினி..பிரமாண்ட வரவேற்புக்கு ரசிகர்கள் ஏற்பாடு!!

By Shankar

Rajinikanth
சென்னை: வரும் புதன்கிழமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார். இதையொட்டி அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இரு மாதங்களுக்கு முன் ராணா என்ற புதிய படத்துக்கு பூஜை போட்டார் ரஜினி. இந்தப் படத்துக்கு பட்ஜெட் 120 கோடி ரூபாய். ரஜினியின் மகள் சௌந்தர்யாவும் ஈராஸ் இன்டர்நேஷனலும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் ரஜினி. தீபிகா படுகோன் ஜோடி. கேஎஸ் ரவிக்குமார் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் துவக்க விழாவன்றுதான் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மூச்சுத் திணறல், செரிமானக் கோளாறு என்று ஆரம்பித்தது பிரச்சனை.

படப்பிடிப்புத் தளத்திலிருந்து உடனே வெளியேறிய ரஜினி, உடனடியாக சென்னை இசபெல்லா மருத்துமனையில் சேர்ந்தார். அன்று மாலையே அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். ஆனால் மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட, மீண்டும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒரு வார சிகிச்சைக்குப் பின் காளிகாம்பாள் கோயிலுக்குப் போய் சிறப்பு பூஜையும் பெசன்ட் நகர் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடும் முடித்து வீட்டுக்கு வந்தார்.

ஆனால் மே 13ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்தது. உடனடியாக அவர் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முழு உடல் பரிசோதனை நடத்தி, பிரச்சனைகளைக் கண்டறிந்தனர்.

அவருக்கு சிறுநீரகக் கோளாறும், நுரையீரலில் நீர்க்கோர்ப்பும் இருப்பது தெரிய வந்தது. நுரையீரலில் இருந்த நீரை வெளியேற்றினர். ஆனாலும் சீராகவில்லை. எனவே உடனடியாக அவருக்கு டயாலிஸிஸ் செய்யப்பட்டது.

சென்னையில் மட்டும் தொடர்ந்து 5 முறை டயாலிஸிஸ் செய்யப்பட்ட பிறகு, அவர் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பினார். ஆனாலும், அவரது சிறுநீரகங்கள் இயங்கவில்லை.

எனவே சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உடன் சென்னையிலிருந்து சிறுநீரக ஸ்பெஷலிஸ்டுகளும் சென்றனர். மே 28ம் தேதி அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கும் அவருக்கு மூன்று முறை டயாலிஸிஸ் செய்தனர். அதன் பிறகு இந்த பிரச்சினையின் மூல காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டனர் சிங்கப்பூர் மருத்துவர்கள்.

அதன் பிறகு, அந்த பிரச்சனைக்கு மட்டும் சிகிச்சை அளிக்க, படிப்படியாக அவரது உடல்நிலை சீரடையத் தொடங்கியது.

ரசிகர்கள் கண்ணீர் பிரார்த்தனை

இதற்கிடையே ரஜினியின் உடல்நிலை சீரடைய வேண்டி, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பிரார்த்தனையில் தீவிரமாக ஈடுபட்டனர்.

கோயில்களில் அன்னதானம், மண்சோறு சாப்பிடுதல், தீமிதித்தல், சர்வமத பிரார்த்தனைகள், உலகளாவிய கூட்டுப் பிரார்த்தனைகள், பாதயாத்திரை என அவரவருக்குத் தெரிந்த வழிகளில் பிரார்த்தனை நடத்தினர். இதுவரை கிட்டத்த 2 லட்சத்துக்கும் அதிகமான முறை பிரார்த்தனைகள் ரஜினிக்காக நடத்தப்பட்டன.

நலமடைந்தார்...

இன்னொரு பக்கம் சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி பூரண நலமடைந்தார், கடந்த ஜூன் 14ம் தேதியே அவர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். ஆனாலும் தொடர்ந்து அவரது உடல்நிலையைக் கண்காணிக்க, சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அருகாமையில் உள்ள குடியிருப்பில் வாடகை வீட்டில் ஒரு மாத காலம் தங்கி மருத்துவ ஆலோசனை பெற்றார். பூரண ஓய்வெடுத்து வந்தார்.

சில தினங்களுக்கு முன் அவரை சோதித்த மருத்துவர்கள், இனி அவர் சென்னை திரும்பலாம். படங்களில் முன்புபோல நடிக்கலாம் என கிரீன் சிக்னல் கொடுத்தனர்.

இந்தத் தகவல் அவரது ரசிகர்களை துள்ள வைத்தது.

எப்போது அவர் சென்னை திரும்புவார் என காத்திருந்தனர் ரசிகர்கள். அவர் திரும்பும் தேதியை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என லதா ரஜினியிடம் நேரில் தெரிவித்தனர். அவரும் அதற்கு தனது ஒப்புதலைத் தெரிவித்தார்.

இப்போது ரஜினி சென்னை திரும்பும் தேதி ஜூலை 13 என உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரமாண்ட வரவேற்பு

இந்த செய்திக்காகவே காத்திருந்த அவரது ரசிகர்கள், சென்னையில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பளிக்க தயாராகி வருகின்றனர். சென்னை மன்ற நிர்வாகிகள் என் ராமதாஸ், சைதை ஜி ரவி போன்றவர்கள் கட் அவுட்கள், பேனர்களை தயார் செய்து வருகின்றனர்.

மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து அவரது வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் வரை வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

புதன்கிழமை இரவு விமானத்தில் அவர் சென்னை திரும்புகிறார். அவர் சென்னை திரும்பியதும் ராணா படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ரஜினியிடமிருந்து விரிவான அறிக்கை வரக்கூடும் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X