twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி என்னும் எளியவர்! - எஸ்பி முத்துராமன்

    By Shankar
    |

    கேள்வி: ரஜினிகாந்தை வைத்து 25 படங்கள் இயக்கியிருக்கிறீர்கள். அவரிடம் தாங்கள் வியந்த விஷயம் எது?

    எஸ்.பி.முத்துராமன்: ரஜினிகாந்த் பஸ் கண்டக்டராக இருந்து நடிகர் ஆனார் என்று தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதையும் தாண்டி ஒரு உண்மை இருக்கிறது.

    Rajini, the man of simplicity

    'ராணுவ வீரன்' படத்திற்காகப் பொள்ளாச்சியில் ஒரு ரைஸ் மில்லில் ஷூட்டிங் நடத்தினோம். ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது, அந்த ரைஸ் மில்லின் உரிமையாளர்களுக்குள் பணத்தைப் பிரித்துக் கொள்வதில் பிரச்னை வந்து விட்டது. எனவே ஷூட்டிங்கை நிறுத்தி விட்டு, அவர்களைச் சமாதானம் செய்ய நான் சென்று விட்டேன். திரும்பி வந்து பார்த்தால், ரஜினி அங்கு அடுக்கி வைக்கப் பட்டிருந்த நெல் மூட்டைகளின் மேல் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். நான் புரொடக்ஷன் ஆட்களிடம் சத்தம் போட்டு விட்டு, ரஜினியிடம், 'இப்படி நெல் மூட்டை மேலே படுத்துத் தூங்குகிறீர்களே? உடம்பெல்லாம் அரிக்காதா?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'பஸ் கண்டக்டர் வேலை கிடைப்பதற்கு முன்னால், லாரி ஷெட்டில், நெல் மூட்டைகளை இறக்கி அடுக்கும் வேலைதான் பார்த்தேன். நெல் மூட்டைத் தூக்கி தூக்கி, என்னுடைய முதுகு மரத்து விட்டது. அதனால் நெல் மூட்டையின் மேல் படுத்தால் எனக்கு அரிக்காது' என்று கூறினார்.

    ரஜினி உண்மையில் தன்னுடைய வாழ்க்கையை ஒரு கூலியாகத்தான் ஆரம்பித்திருக்கிறார். அப்படி வாழ்க் கையை ஆரம்பித்த ரஜினி, இன்று உலகம் போற்றும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கிறார். இப்படி உயர்ந்த பிறகும் அந்த ரஜினியிடம் எந்த மாற்றத்தையும் நான் பார்க்கவில்லை. ஒரு நாள் கூட இதற்கெல்லாம் காரணம் தான்தான் என்று அவர் தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டதில்லை. இதெல்லாம் எப்படிச் சாத்தியமானது என்று கேட்டால் கூட, வானத்தை நோக்கித் தான் கையைக் காட்டுவார்.

    'சிவாஜி' படம் ஏ.வி.எம். தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவானது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அனைவருக்கும் தனித்தனியாகக் கேரவன்கள் கொடுக்கப்பட்டு இருந்தது. ஏ.வி.எம்.சரவணன் ஸார் இருப்பதிலேயே காஸ்ட்லியான கேரவன் ஒன்றை வரவழைத்து ரஜினிக்காக நிறுத்தி வைத்தார். முதல் நாள் ஷூட்டிங்கிற்கு வந்த ரஜினி, எப்போதும் போல ஏ.வி.எம்.மின் மேக்அப் ரூமுக்குச் சென்று விட்டார். அவரிடம் 'உங்களுக்குத் தனி கேரவன் இருக்கிறது' என்று சொன்னதும் 'அதெல்லாம் எதுக்கு ஏற்பாடு செஞ்சீங்க? எனக்கு இந்த ரூமே போதும்' என்று சொல்லிவிட்டார். படம் முழுவதுமே அவர் அந்தக் கேரவனை உபயோகிக்கவில்லை. அவருடைய எளிமைக்கும், அடக்கத்திற்கும் இது போல நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.

    English summary
    Veteran director SP Muthuraman remembered Rajinikanth's simplicity, even after he became a superstar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X