அரசியலுக்கு வருவது தெய்வச்செயல்; கடவுள் மனது வைக்கவேண்டும்: ரஜினிகாந்த்
மங்களூர்: அரசியல் பிவேஷம் என்பது தெய்வச்செயல். கடவுள் மனது வைத்தால் அது நடக்கும்." என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிமோகா மாவட்டத்தில் நடந்து வரும் 'லிங்கா' படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மங்களூர் சர்வதேச விமான நிலையத்துக்கு புதன்கிழமையன்று காலையில் வந்தார்.
ரஜினிகாந்த் வருவதை அறிந்த அவரது ரசிகர்கள் ஏராளமானோர் மங்களூர் விமான நிலையத்தில் திரண்டனர். பின்னர் விமான நிலையத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார்.

22 ஆண்டுகளுக்குப் பின்னர்
சிமோகாவில் நடக்கும் லிங்கா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மங்களூர் வந்து உள்ளேன். நான் இங்கு (மங்களூர்) 22 ஆண்டுகள் கழித்து வந்து உள்ளேன். ஆனாலும் எனக்கு விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதற்காக அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

21 நாட்கள் படப்பிடிப்பு
லிங்கா படம் ஏற்கனவே கர்நாடக மாநிலம் மைசூரில் தொடங்கி மண்டியா, மலவள்ளி, மத்தூர் ஆகிய பகுதியில் படபடிப்பு நடத்தப்பட்டது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சிமோகாவில் 21 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

பிறந்தநாளில் ரிலீஸ்
லிங்கா படத்தை, எனது பிறந்த நாளான டிசம்பர் 12-ந் தேதி திரைக்கு கொண்டு வர வேலைகள் நடந்து வருகிறது என்று ரஜினி கூறினார்.

அரசியல் பிரவேசம்
நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? என்று ஒரு செய்தியாளர் கேட்டார். அதற்கு பதிலளித்த, ரஜினிகாந்த் ‘அரசியலில் நுழைவது தெய்வச் செயல். கடவுள் மனது வைத்தால் அது (அரசியலுக்கு வருவது) நடக்கும். ஒரு மாநிலத்தின் முதல்வரை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்' என்றார்.

ஆரோக்கியமாக இருக்கிறேன்
உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தீர்களே, தற்போது உடல் நிலை எப்படி இருக்கிறது என்று மற்றொரு செய்தியாளர் கேட்டதற்கு, ‘தற்போது நான் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்' என்றார். இதையடுத்து ரஜினிகாந்த் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு கார் மூலம் புறப்பட்டு சென்றார்


Click it and Unblock the Notifications











