கொஞ்சம் இருங்க பாஸ்.. வேட்டையன் படத்தை தாமதமாக்கும் ரஜினிகாந்த்?.. என்ன ஆச்சுனு தெரியலையே
சென்னை: ரஜினிகாந்த் இந்தியாவின் மூத்த நடிகர்களில் ஒருவர். கடந்த பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவர் ஹீரோவாக நடித்து கடைசியாக வெளியான ஜெயிலர் படம் வெற்றியையும், கெஸ்ட் ரோலில் நடித்த லால் சலாம் படம் தோல்வியையும் சந்தித்தன. தற்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவரும் அவர் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தச் சூழலில் வேட்டையன் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
பெங்களூருவில் பேருந்து நடத்துநராக இருந்து தற்போது இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக மாறி நிற்கிறார் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் கடைசியாக லால் சலாம் திரைப்படம் வெளியானது. அதில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். படம் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. அதற்கு முன்னதாக நடித்த ஜெயிலர் படம் மெகா ஹிட்டானது. கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு ஜெயிலர் நிவாரண மருந்தாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்வரை படம் உலகம் முழுவதும் வசூலித்தது.

வேட்டையன்: தற்போது அவர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குநர் என்பதால் ஞானவேல் இந்தப் படத்தில் ரஜினியை வைத்து எந்த மாதிரியான விஷயத்தை பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேசமயம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான டைட்டில் டீசரை பார்க்கையில் ஒருவேளை படம் கமர்ஷியல் பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.
நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்ச் வாரியர், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஃபகத் பாசில் ரஜினிக்கு மகனாகவும், ராணா டகுபதிதான் படத்துக்கு வில்லன் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. படமானது அக்டோபர் மாதம் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
கூலி: இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி நடிக்கிறார். இப்படி ரஜினிகாந்த் இப்போதும் படுபிஸியாக இருப்பதை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகும் ஆச்சரியம்தான் படுகிறது. கவிஞர் வைரமுத்து ரஜினிக்கு, 'மீசை வைத்த குழந்தையப்பா' என்று ஒரு பாடலில் எழுதியிருப்பார். அதற்கேற்றபடி குழந்தைபோல் படு சுறுசுறுப்பாக இருக்கிறார் ரஜினி. அந்தப் படத்தை முடித்துவிட்டு ரஜினிகாந்த் யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்திருக்கிறது.
நோ டப்பிங்: வேட்டையன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துவருகின்றன. விஜய் தனக்கான போர்ஷனை நடித்து முடித்துவிட்டார். எனவே சமீபத்தில் இமயமலை சென்றார். மேலும் கூலி படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது. அதன்படி இப்போது ரஜினி பற்றி புதிய தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. அதன்படி கூலி படத்தின் முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு வேட்டையன் படத்துக்கு டப்பிங் தருவதாக அவர் கூறியதாகவும் அதற்கு ஞானவேலுவும் ஒத்துக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











