எதுக்கு தேவையில்லாத வம்புனு முடிவு செய்துவிட்டாரா ரஜினிகாந்த்?.. அவர் எடுத்திருக்கும் முடிவு இதுவா?
சென்னை: ரஜினிகாந்த் இப்போது கூலி திரைப்படத்தில் நடித்துவருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் அந்தப் படத்தில் அவருடன் ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கண்டிப்பாக இந்தப் படத்தை மெகா ஹிட்டாக கொடுக்க வேண்டும் என லோகேஷ் கனகராஜ் முழு மூச்சாக உழைத்துவருகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார் ரஜினி. இந்தச் சூழலில் அவர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
அண்ணாத்த, தர்பார் என வரிசையாக இரண்டு தோல்வி படங்களை கொடுத்தார் ரஜினிகாந்த். அதன் காரணமாக அவரது ரசிகர்கள் கொஞ்சம் டல்லாகினர். அதனைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி உலகளவில் 750 கோடி ரூபாய்வரை வசூலித்தது. எனவே ஜெயிலர் கொடுத்த வெற்றியை அடுத்து நடித்த வேட்டையனிலும் அவர் தக்க வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியிருந்த வேட்டையன் சுமாரான வரவேற்பையே பெற்றது.

கூலி ரஜினிகாந்த்: வேட்டையன் படத்தின் ரிசல்ட்டை கண்டிப்பாக ரஜினிகாந்த் எதிர்பார்த்திருக்கமாட்டார்தான். சூழல் இப்படி இருக்க தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருடன் அமீர் கான், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் சென்னையில் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின.
லோகேஷுக்கு முக்கியம்: இந்தத் திரைப்படம் லோகேஷ் கனகராஜுக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதற்கு முன்னதாக அவர் விஜய்யை வைத்து இயக்கிய லியோ திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. எனவே அதற்கும் சேர்த்து இதில் பதிலடி கொடுக்க காத்திருக்கிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு ரஜினிகாந்த் அடுத்ததாக ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்கவிருக்கிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவுடன் கடந்த மாதம் வெளியானது.
ஜெயிலர் 2 மீது எதிர்பார்ப்பு: ஜெயிலர் 2வின் அறிவிப்பு வீடியோவே ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்துவிட்டது. அதில் ரஜினியின் மாஸ் என்ட்ரியும், நெல்சனின் மேக்கிங்கும் அசரடித்தது. கண்டிப்பாக முதல் பாகம் போலவே இரண்டாவது பாகமும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று ரஜினி ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். ஜெயிலர் 2வை முடித்துவிட்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மாரி செல்வராஜுக்கு நோ: இதற்கிடையே தற்போதைய இயக்குநர்களில் முக்கியமானவராக பார்க்கப்படும் மாரி செல்வராஜ் சமீபத்தில் ரஜினிகாந்த்தை சந்தித்து ஒரு கதை சொன்னதாகவும்; அதற்கு ரஜினி ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க வேண்டாம் என்று ரஜினி முடிவு செய்துவிட்டதாகவும்; அவரது இயக்கத்தில் நடித்தால் தேவையில்லாத சர்ச்சைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு; அதனால் எதற்கு வம்பு என நினைத்து சூப்பர் ஸ்டார் ஒதுங்கிவிட்டதாக திரைத்துறையில் குரல்கள் கேட்கின்றன. முன்னதாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவந்த பைசன் திரைப்படத்தின் ஷூட்டிங் நேற்றுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











