கூலி படத்துக்கு பிறகு ரஜினியின் பிளான் என்ன?.. வெளியான லேட்டஸ்ட் தகவல்.. ரசிகர்கள் மகிழ்ச்சி
சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் அந்தப் படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கும் சூழலில்; அந்தப் படத்தை முடித்துவிட்டு ரஜினியின் பிளான் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.
ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து ஜெயிலர் படமும், கெஸ்ட் ரோலில் நடித்து லால் சலாம் படமும் கடைசியாக வெளியாகின. இவற்றில் ஜெயிலர் மெகா ஹிட்டானது. ஆனால் லால் சலாமோ வழுக்கி விழுந்துவிட்டது. இதற்கிடையே ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் ரஜினிகாந்த். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். படத்துக்கு வேட்டையன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வேட்டையன் ரிலீஸ்: படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோ நடிக்கின்றனர். ஜெய் பீம் படத்தின் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்தவர் ஞானவேல் என்பதால் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. படத்தின் டைட்டில் டீசரும் நல்ல வரவேற்பையே பெற்றது. படமானது அக்டோபர் மாதம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷூட்டிங் ஓவர்: வேட்டையன் படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரி, மும்பை, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்துவந்தது. ரஜினிகாந்த்தும் முழு மூச்சுடன் அதில் நடித்துவந்தார். படத்தில் அவருடைய போர்ஷனுக்கான ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்தது. நிச்சயம் இந்தப் படம் ரஜினிகாந்த்தின் கரியரில் தரமான சம்பவமாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
கூலி: இதற்கிடையே கோலிவுட்டின் தற்போதைய மோஸ்ட் வாண்டட் இயக்குநராக திகழ்ந்துகொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவர் கமல் ஹாசனை வைத்து விக்ரம் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்தார். அடுத்து அவர் இயக்கிய லியோ படம் சறுக்கியது. சூழல் இப்படி இருக்க ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்குகிறார் அவர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதில் ஹிந்தியிலிருந்து பெரிய ஹீரோவை வில்லனாக இறக்குவதற்கு லோகேஷ் கனகராஜ் முடிவு செய்திருக்கிறார். மேலும் சத்யராஜ் இதில் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.
அடுத்த பிளன்: இந்நிலையில் கூலி படத்தை முடித்துவிட்டு ரஜினிகாந்த்தின் பிளான் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஏற்கனவே தன்னை வைத்து பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் இப்போது சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கிவருகிறார். அந்தப் படத்தின் இண்ட்ரோ க்ளிம்ப்ஸ் காட்சிகள் சமீபத்தில்தான் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
விஜய்க்கு வைத்திருந்த கதையா?: ரஜினிகாந்த்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கப்போகிறார் என்ற தகவல் வெளியானதும் ரசிகர்கள் ஏகப்பட்ட கேள்விகளை கேட்க ஆரம்பித்திருக்கின்றனர். அதாவது விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தார். ஆனால் விஜய் அரசியலுக்கு செல்லவிருப்பதால் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கிறார். அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்குவதும் ஏறத்தாழ உறுதியாகியிருக்கிறது. எனவே விஜய்க்கு கார்த்திக் சுப்புராஜ் வைத்திருந்த கதையைத்தான் ரஜினியை வைத்து எடுக்கப்போகிறாரா என்று கேள்வி கேட்டுவருகிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











