ஆர்.பி. சௌத்ரி மறைவு ரஜினிகாந்த் நேரில் இரங்கல்.. நல்ல நண்பரை இழந்துவிட்டேன்!
சென்னை: மறைந்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி அவர்களின் உடலுக்கு திரையுலகினர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பாளராக திகழ்ந்த ஆர்.பி. சௌத்ரியின் மறைவு , திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். ரஜினியின் வருகையால் அங்கு இருந்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்.பி சௌத்ரி மறைவு: நேற்று முதல் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் தொடர்ந்து வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் நடிகரான விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியது பெரும் கவனத்தை பெற்றது. அஞ்சலி செலுத்திய பின்னர், ஆர்.பி. சௌத்ரியின் மகனும் நடிகருமான ஜீவாவை விஜய் கட்டியணைத்து ஆறுதல் கூறினார். அந்த தருணம் அங்கு இருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.
ரஜினி உருக்கம்: ஆர்.பி. சௌத்ரி தயாரித்த பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார். விக்ரமன், கே.எஸ். ரவிக்குமார், எழில், பேரரசு, சசி,லிங்குசாமி என பல இயக்குநர்களுக்கு வாய்ப்பு வழங்கியவர் என்ற பெயரையும் அவர் பெற்றிருந்தார். அவரது மறைவால் தமிழ் திரைப்பட உலகம் ஒரு முக்கிய தயாரிப்பாளரை இழந்துள்ளது என திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த், நான் அவரின் படத்தில் நடித்தது இல்லை. ஆனால், அவர் நெருங்கிய நண்பர். 99 படம் தயாரித்துவிட்டேன் 100வது படம் எடுத்துவிட்டு ஒய்வு எடுக்கலாம் என நினைக்கிறேன். இதனால், 100வது படத்தில் நீங்க நடிக்க வேண்டும் என கூறியதாக ரஜினிகாந்த் உருக்கத்துடன் கூறியுள்ளார். ஆர்பி சௌத்ரியின் இறுதி சடங்கு இன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது.


Click it and Unblock the Notifications