நல்லகண்ணுவின் அஞ்சலிக்காக போன இடத்தில் KHXRK படம் பற்றி பேச்சு.. கேப்டன் மனைவியிடம் ரஜினி சொன்னதை கேளுங்க
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு உடல்நல குறைவால் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 101. இன்று மாலை பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சென்னை மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம் செய்யப்படுகிறது. இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று தோழரின் உடலுக்கு தனது அஞ்சலியை செலுத்தினார்.
இந்திய அரசியலில் நேர்மையான மட்டும் எளிமையான தலைவர் நல்லகண்ணு. மக்களால் அவர் ஒருமுறை கூட எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும்; அவர் மக்கள் பணியிலிருந்து எப்போதும் விலகியதில்லை. அதேபோல் தேவையில்லாத செலவுகள், ஆரம்பரத்தை அறவே ஒதுக்கியிருந்தார். அவரை வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையை தவிர்த்து வேறு உடைகளில் பார்ப்பது அரிதான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசு கொடுத்த வீட்டை வேண்டாம் என சொல்லி இறுதிவரை வாடகை வீட்டில்தான் வசித்தார்.
தகைசால் தமிழர் விருது: அதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசு அவருக்கு தகைசால் தமிழர் விருதுடன் பத்து லட்சம் ரூபாயையும் வழங்கியது. உடனே நல்லகண்ணுவோ அந்த நிதியோடு தனது சொந்த பணம் 5,000 ரூபாயை கூடுதலாக சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார். இப்படி யாருமே செய்திருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு அவரது செயலும், பேச்சும், சிந்தனையும் மக்களுக்காக மட்டுமே கடைசிவரை இருந்தது.

உயிரிழந்த நல்லகண்ணு: இப்படிப்பட்ட நிலைமையில் அண்மையில் தனது வீட்டில் இருந்தபோது தவறி விழுந்திருக்கிறார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக மீண்ட அவருக்கு; திடீரென மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டது. அதனையடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது. மருத்துவர்கள் தங்களால் முடிந்த அளவு எவ்வளவோ முயன்றும் நல்லகண்ணுவின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. இதன் காரணமாக அவர் நேற்று உயிரிழந்தார்.
உடல் தானம்: அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழர்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று முதலமைச்சர் அஞ்சலி செலுத்திவிட்டு; நல்லகண்ணுவின் உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவித்தார். இன்று பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு சென்னை மருத்துவக் கல்லூரிக்கு அவரது விருப்பப்படியே உடல் தானம் செய்யப்படுகிறது. இறந்த பிறகும் அடுத்தவர்களுக்கு பயன்பெறுகிறார் தோழர் நல்லகண்னு என அனைவரும் நெகிழ்ந்து போயிருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் அஞ்சலி: திரைத்துறை சார்பில் ரஜினிகாந்த், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய், எம்.எஸ்.பாஸ்கர் என ஏராளமானோர் நல்லகண்ணு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் ரஜினி தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதாவது நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷிடம் பேசிக்கொண்டிருந்தார் சூப்பர் ஸ்டார்.
அப்போது அவரிடம், 'கமல் சாருடன் நீங்கள் செய்யும் படத்தின் ப்ரோமோ நன்றாக இருந்தது. கேட்குறாங்கள சொல்லுங்க ஜி' என சொன்னதெல்லாம் சூப்பராக இருந்தது என்றார். அவரைத் தொடர்ந்து கேப்டனின் மைத்துனர் சுதீஷ், 'நீங்கள் கண்ணாடியை கழற்றி போட்டவுடனேயே அவ்வளவுதான்' என சொன்னார். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ரஜினி, 'நெல்சன் நல்ல இயக்குநர்' என கூறினார். இந்த வீடியோ ட்ரெண்டானதோடு மட்டுமின்றி, ஒரு நேர்மையான தலைவரது இறப்பில் சென்று திரைப்படத்தை பற்றியா பேசுவது என விமர்சனங்களையும் சந்தித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications















