வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறாரா ரஜினிகாந்த்?.. சாத்தியமாகுமா?.. ரசிகர்கள் ஆவல்
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த ஐந்தாம் தேதி வெளியானது. அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருந்த இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்போடு ரிலீஸாகி சுமாரான வரவேற்பையே பெற்றது. அதேசமயம் வசூல் ரீதியாக பட தயாரிப்பு நிறுவனத்துக்கு கொள்ளை லாபம் என்றே சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக புதிய தகவல்கள் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கின்றன.
வெங்கட் பிரபு இயக்கம் என்றாலே அந்தப் படத்தை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு இருப்பார்கள். இதுவரை அவர் இயக்கிய படங்களில் ஒருசில படங்களே தோல்வியடைந்திருக்கின்றன. முக்கியமாக தான் இயக்கும் படங்களில் பக்காவான ட்விஸ்ட், ஜாலியான சீன்கள் என முழு கமர்ஷியல் பேக்கேஜை வைத்துவிடுவார். ஆனால் அவர் இயக்கிய கஸ்டடி திரைப்டம் படுதோல்வியை சந்தித்தது. அதேசமயம் அதற்கு முன்னதாக அவர் இயக்கிய மாநாடு படம் 100 கோடி ரூபாய் வசூலித்து கெத்து காட்டியது.

GOAT வெங்கட் பிரபு: கஸ்டடி தோல்விக்கு பிறகு விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கியிருந்தார் வெங்கட். ஏஜிஎஸ் பேனரில் அர்ச்சனா கல்பாத்தி பிரமாண்ட பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரித்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் மல்டி ஸ்டாரர் படமாக இது உருவாகியிருந்தது. கண்டிப்பாக இந்தப் படத்தை ஹிட் படமாக கொடுத்து தரமான கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் வெங்கட் பிரபு உழைத்திருந்தார். கண்டிப்பாக கஸ்டடி சந்தித்த விமர்சனத்துக்கு இதில் மருந்திட்டு கொள்ளலாம் என்று நினைத்திருந்தார் வெங்கட்.
சுமாரான வரவேற்பு: செப்டம்பர் ஐந்தாம் தேதி படமானது ரிலீஸானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் பார்க்க ரசிகர்கள் சென்றார்கள். முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படத்தை ஏகத்துக்கும் கொண்டாடினார்கள். அதேசமயம் அடுத்தடுத்த நாட்களில் படம் பார்த்த பொதுவான ரசிகர்கள் படத்தில் ஏகப்பட்ட குறைகளை கூறி தங்களது சுமாரான வரவேற்பையே கொடுத்தனர். இதன் காரணமாக படக்குழு கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
சிவகார்த்திகேயனுடன்: வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் இணையவிருக்கிறார். விரைவில் அந்தப் படத்தின் பணிகள் தொடங்கவிருக்கின்றன. அநேகமாக அந்தப் படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனமே தயாரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக திரைத்துறையில் பேசப்படுகிறது. சூழல் இப்படி இருக்க கோலிவுட்டில் புதிய தகவல் ஒன்று வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது.
ரஜினியுடன் வெங்கட் பிரபு: அதாவது வெங்கட் பிரபுவின் படங்களை ஆரம்பத்திலிருந்தே கவனித்துவரும் ரஜினிகாந்த்; இப்போது அவரது இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினியிடம் வெங்கட் பிரபு ஒரு கதையை சொன்னதாகவும்; தற்போது அதனை டெவலப் செய்யுமாறு ரஜினியிடமிருந்து சிக்னல் கிடைத்திருப்பதாகவும் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. அதேசமயம் இப்போது கூலி படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த் அடுத்ததாக ஜெயிலர் 2வில் நடிக்கவிருக்கிறார். எனவே இப்போதைக்கு வெங்கட் பிரபு - ரஜினிகாந்த் கூட்டணி அமைவது சாத்தியமாகுமா என்ற கேள்வியோடு ரசிகர்கள் காத்திருக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











