ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்-ரசிகர்கள் உற்சாக வரவேற்பு, போலீஸ் தடியடி

உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் இரு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார் ரஜினி. அதில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தால், சிங்கப்பூரில் உள்ள மெளன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நடந்த சிகிச்சையில் அவரது உடல் நலம் தேறியது. குணமடைந்த அவர் மருத்துவமனையிலிருந்து திரும்பி சிங்கப்பூரிலேயே ஒரு அபார்ட்மென்ட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார்.
தற்போது ஓய்வின் காரணமாக முழு குணமும் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த். இந்திய நேரப்படி சிங்கப்பூரிலிருந்து மாலை 6 மணிக்கு ரஜினி சென்னை கிளம்பினார். இரவு 10.45 மணிக்கு சென்னை வந்தார்.
அவருக்கு விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மிகச் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். விஐபி வாயில் வழியாக நடந்து வந்த ரஜினி ரசிகர்களை நோக்கி கையசைத்துவிட்டு கிளம்பிச் சென்றார்.
சென்னையில் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்குச் சென்று ஓய்வெடுக்கவுள்ளார் ரஜினிகாந்த். போயஸ் தோட்ட இல்லத்தில் வாஸ்துப்படியான மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதால் அது முடிந்ததும்தான் போயஸ் தோட்ட வீட்டுக்கு ரஜினி வருவார்.
முன்னதாக ரஜினியின் மனைவி லதா விடுத்த அறிக்கையில், ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரஜினியை வரவேற்க வரும்போது மிக மிக கவனமாகவும், அமைதியாகவும், யாருக்கும் எந்தத் தொல்லையும் இல்லாத வகையில் நடந்து கொள்ளுமாறும், வெளியூர்களிலிருந்து வரும் ரசிகர்கள், தேவையற்ற ஆபத்துகளை தவிர்க்க அரசு பஸ்கள், ரயில்களில் வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.


Click it and Unblock the Notifications











