ஜெர்சி பட இயக்குநருடன் கைகோர்க்கும் ராம்சரண்... சிறப்பான கூட்டணி!
ஐதராபாத் : நடிகர் ராம்சரண் தெலுங்கு படவுலகில் தன்னை சூப்பர் ஹீரோவாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
தற்போது இயக்குநர் ஷங்கருடன் இணைந்து படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக ஜெர்சி பட இயக்குநருடன் இணைந்து படத்தில் நடிக்கவுள்ளார் ராம்சரண்.

டோலிவுட் சூப்பர் ஹீரோ
தெலுங்கு படவுலகின் சூப்பர் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் நடிகர் ராம்சரண். தொடர்ந்து பல ஹிட்களை இவர் கொடுத்து வருகிறார். இயக்குநர் ஷங்கருடன் இணைந்து தன்னுடைய 15வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் இவருக்கு இந்தி நடிகை கியாரா அத்வானி ஜோடி சேர்ந்துள்ளார்.

ஷங்கருடன் இணைந்த ராம் சரண்
அரசியல் களத்தை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் மக்களுக்கு படத்தில் சிறப்பான மெசேஜ் ஒன்று காத்திருப்பதாகவும் சமீபத்தில் கியாரா ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தின் பூஜை கடந்த மாதத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது.

ஹீரோயின் கியாரா அத்வானி
இந்த சூட்டிங்கில் அடுத்த மாதம் கியாரா பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஷங்கர் இயக்கத்தில் நடிப்பது மிகவும் உற்சாகமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்திற்கு பிறகு ராம்சரண் ஜெர்சி பட இயக்குநருடன் கைகோர்க்கவுள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜெர்சி படம்
கடந்த 2019ல் கவுதம் இயக்கத்தில் வெளியான படம் ஜெர்சி. நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சத்யராஜ் நடிப்பில் தெலுங்கில் வெளியான இந்தப் படம் சிறப்பான வெற்றியை பெற்றது. தொடர்ந்து படம் பாலிவுட்டிலும் ஷாகித் கபூர் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. கவுதமே இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார்.

ராம்சரணுடன் இணையும் கவுதம்
இந்தப் படம் இன்னும் ரிலீசாகாத நிலையில் தனது அடுத்த படத்தின் வேலைகளை துவங்கிய கவுதம், ராம்சரணிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் கவுதம் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கவுள்ள படம் குறித்து இன்றைய தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை யுவி கிரியேஷன்ஸ் மற்றும் என்விஆர் சினிமா இணைந்து தயாரிக்கவுள்ளது.

ராம்சரணின் 16வது படம்
இந்தப் படம் ராம்சரணின் 16வது படம். முன்னதாக தன்னுடைய தந்தை சிரஞ்சீவியின் நடிப்பில் கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தை தயாரித்துள்ள ராம்சரண் அந்தப் படத்தில் நடித்தும் உள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











