இந்திய கிராமங்களின் ஆன்மாவை கொண்டாட முடிவெடுத்த ராம் சரண்.. பெத்தி பட சிறப்பு என்ன?
'மெகா பவர் ஸ்டார்' ராம் சரண் நடித்துள்ள கிராமத்து விளையாட்டுப் பின்னணி கொண்ட பிரம்மாண்ட திரைப்படம் 'பெத்தி', இந்திய கிராமங்களின் உணர்வுகளையும் அங்குள்ள திறமைகளையும் பெரிய திரையில் கொண்டாட உள்ளதாக டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். அவரது இந்தப் பேச்சு படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.
புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாருவின் பெரும் பொருட்செலவில் உருவான இப்படம், ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்கள் ஏற்கெனவே பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், சமீபத்தில் வெளியான இதன் டிரெய்லர், ஒரு விளையாட்டு வீரரின் ஊக்கமளிக்கும், உணர்ச்சிமயமான பயணத்தை அழுத்தமாக வெளிப்படுத்தி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
ஜான்வி கபூர் நாயகியாக நடிக்க, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், திவ்யேந்து சர்மா, ஜகபதி பாபு, போமன் இரானி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
'பெத்தி' படக்குழு, வெளியீட்டை முன்னிட்டு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. போபாலில் நடந்த பிரம்மாண்ட விழாவைத் தொடர்ந்து, டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, படம் பற்றிய தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய போமன் இரானி, "இந்திய கிராமங்களில் மறைந்து கிடக்கும் உண்மையான திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் படம் தான் 'பெத்தி'. இந்த படத்தை பார்த்த பிறகு ஒவ்வொரு இளைஞரும் 'பெத்தி' போல ஆக வேண்டும் என்ற ஊக்கத்தை பெறுவார்கள். இந்திய விளையாட்டுத் துறையில் மறைந்து கிடக்கும் திறமைகளுக்கு சரியான வாய்ப்புகள், பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்த படம் உருவாக்கும்," என்றார். மேலும், இப்படம் இந்திய சினிமா வரலாற்றில் இடம்பிடிக்கும் என்றும் அவர் கூறினார்.
திவ்யேந்து சர்மா பேசுகையில், "இவ்வளவு திறமையான கலைஞர்களுடன் ஒரே படத்தில் இணைந்து நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ராம் சரண் உடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. 'பெத்தி' என்பது அடையாளத்திற்கான போராட்டத்தை சொல்லும் உயிர்ப்புடன் கூடிய ஒரு சர்வைவல் கதையாக இருக்கும்," என்றார்.
தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு, "என் முதல் தயாரிப்பாக இப்படம் உருவாகுவது பெருமையாக உள்ளது. இந்திய கலாச்சார வேர்களை கொண்ட ஒரு உணர்ச்சிப்பூர்வமான மற்றும் அதேசமயம் விறுவிறுப்பான கதையாக 'பெத்தி' இருக்கும். குடும்பத்துடன் குழந்தைகளையும் திரையரங்கிற்கு அழைத்து வந்து இந்த படத்தை பார்க்க வேண்டும்," என்று தெரிவித்தார்.
நாயகி ஜான்வி கபூர், டெல்லியின் வெப்பத்தை பற்றி நகைச்சுவையாக பேசிக்கொண்டே, தனது கதாபாத்திரம் இயக்குநர் புச்சி பாபு சனாவின் தனித்துவமான அணுகுமுறையால் ஈர்க்கப்பட்டதாக கூறினார். ராம் சரண் அர்ப்பணிப்பு குறித்து பேசுகையில், "கேமரா ஆஃப் ஆனதும் அமைதியாக இருப்பார். ஆனால் ஷாட் ஆரம்பித்தவுடன் திரையே வெடிக்கும் அளவிற்கு ஆற்றலை வெளிப்படுத்துவார்," என்று பாராட்டினார்.
மேலும், "இந்த படம் இந்தியாவின் புறக்கணிக்கப்பட்ட மக்களின் அடையாளப் போராட்டத்தை பேசும் ஒரு மாஸ் என்டர்டைனர். இந்த படம் உண்மையான உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது," என்றும் அவர் கூறினார்.
ராம் சரண் பேசுகையில், "கடந்த இரண்டரை ஆண்டுகளாக நாங்கள் இந்த படத்திற்காக உண்மையுடன் உழைத்துள்ளோம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை திரையரங்கிற்கு அழைத்து வந்து இந்த படத்தை பார்க்க வேண்டும். இந்திய மண்ணின் வாசனையுடன் உருவாகும் கதைகளே உலகளவில் கொண்டாடப்படுகின்றன. 'பெத்தி' அப்படிப்பட்ட ஒரு கதை," என்றார்.
பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முகம்மது என்ற இளைஞர், தன் கிராமத்திலிருந்து மேலும் 80 பேரை இந்தியாவுக்காக விளையாட ஊக்குவித்த சம்பவத்தை பிரதமர் கூறியதாகத் தெரிவித்தார். "அப்படிப்பட்ட உண்மையான இந்திய ஆன்மாவையும், கிராமத்து மக்களின் உறுதியையும் 'பெத்தி' படம் கொண்டாடுகிறது," என்றார்.
தனது மாறுபட்ட தோற்றங்கள் பற்றிப் பேசிய ராம் சரண், "ஒவ்வொரு கதாபாத்திர மாற்றமும் சவாலானதே. குறிப்பாக மல்யுத்த வீரர் தோற்றம் மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் நான் கதையின் தேவையை மட்டுமே பின்பற்றினேன்," என்றார்.
இறுதியாக, "உண்மையான இந்திய ஆன்மாவையும், போராட்ட மனப்பாங்கையும் கொண்ட 'பெத்தி' படத்தை உலகம் முழுவதும் ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து அனுபவிக்க வேண்டும்," என்று ராம் சரண் அழைப்பு விடுத்தார். 'பெத்தி' திரைப்படம் வரும் ஜூன் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications