நல்லவேளை வெங்கட் பிரபுவின் அந்தப் படத்தில் நடிக்கல.. ராமராஜன் சொன்ன சீக்ரெட்.. இப்படியும் நடந்திருக்கா?
சென்னை: ராமராஜன் 80களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். கிராமத்து பக்கம் ராமராஜனுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. முக்கியமாக ஹீரோவாக மட்டுமே நடித்த ஒரே ஒரு கதாநாயகன் என்றால் அது ராமராஜன் மட்டும்தான். ஒருகட்டத்தில் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்க அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். பிறகு ஆளே காணாமல் போன அவர் இப்போது சாமானியன் படத்தில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் ஆகியோர் ஹீரோக்களாக கோலோச்சியிருந்த காலகட்டத்தில் சினிமாவுக்குள் நுழைந்தவர் ராமராஜன். உயரம் கம்மியான உருவம், சினிமாவுக்குரிய இலக்கணம் இல்லாத உடல்வாகு என முத்திரை குத்தப்பட்டாலும் தனது திறமையால் முன்னேறியவர் ராமராஜன். கிராமத்து பக்கம் அவருக்கென்று ரசிகர்கள் இருந்தனர். முக்கியமாக நமது வீட்டில் இருக்கும் ஒருவர் போல் அவர் இருந்ததால் ரசிகர்கள் அவரை எளிதாக ஏற்றுக்கொண்டனர்.

மெகா ஹிட்: ராமராஜனின் திரையுலக வாழ்க்கையை புரட்டிப்போட்ட படம் என்றால் அது கரகாட்டக்காரன். கங்கை அமரன் இயக்கியிருந்த அந்தப் படம் தில்லானா மோகனாம்பாள் ஜானரில்தான் உருவாகியிருந்தது. ஆனால் அதில் விசேஷம் என்னவென்றால் இதில் எடுத்துக்கொண்ட மையக்கரு கரகாட்டம். கிராமங்கள் பக்கம் கொண்டாடப்படும் கரகாட்டத்தை கதையின் கருவாக வைத்து; ஹீரோ, ஹீரோயினை கரகாட்ட கலைஞர்களாக காண்பித்திருந்ததால் படம் மெகா ஹிட்டானது.
ரஜினி, கமலுக்கு இணையாக: கரகாட்டக்காரன் வெற்றிக்கு பிறகு அவரது கிராஃப் உச்சத்துக்கு சென்றது. ரஜினி,கமலுக்கு இணையாக அவருக்கும் ரசிகர்கள் சேர்ந்தனர். கரகாட்டக்காரனுக்கு பின்பு அவர் நடித்த பல படங்கள் ஹிட்டடித்தன. இந்தச் சூழலில் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. நிலைமை இப்படி இருக்க சினிமாவிலிருந்து ஒதுங்கிய ராமராஜன் அரசியலில் கவனத்தை திருப்பினார். ஆனால் அதிலிருந்தும் ஒருகட்டத்துக்கு மேல் ஒதுங்கினார்.
சாமானியன்: தமிழ் சினிமாவில் சோலோ ஹீரோவாக மட்டுமே அதிக படங்கள் நடித்தவர் என்ற பெருமை ராமராஜனுக்கு மட்டும்தான் உண்டு. அவர் பல வருடங்களுக்கு பிறகு சாமானியன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். பல வருடங்கள் திரையில் தனது முகத்தை காண்பிக்காமல் இருந்த ராமராஜன் தற்போது சாமானியன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். ராகேஷ் என்பவர் இயக்கியிருக்கும் இப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்திருக்கின்றன.
ராமராஜன் பேட்டி: இந்நிலையில் ராமராஜன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர், "சாமானியன் படத்துக்கு முன்னதாகவே எனக்கு வேறு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. பலர் என்னை சந்தித்து கதை சொன்னார்கள். அவர்களில் ஒருவர்தான் வெங்கட் பிரபு. அவர், பஞ்சு அருணாச்சலத்தின் மகன் சுப்பு, அம்மா கிரியேஷன்ஸ் சிவா ஆகியோர் வந்து என்னிடம் கதை சொன்னார்கள்.
கதை எனக்கு திருப்தி தரவில்லை. மேலும் ஷூட்டிங் இலங்கையில் என்று சொன்னார்கள். நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். பிறகு படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டார்கள். அதில் பார்ட்டி என்று இருந்தது. மேலும் பாட்டில்களும் இருந்தன. அதை பார்த்ததும் நல்ல வேளை நான் அதில் நடிக்கல என்று நிம்மதியடைந்தேன். அதேபோல் ஆர்.ஜே.பாலாஜியும் எல்கேஜி கதையை என்னிடம்தான் சொன்னார். ஆனால் இடைவேளையின்போதுதான் எனது கேரக்டர் வரும். அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











