தொலைந்து போன பணம்.. உதவியாளரை காப்பாற்றிய அஜித்.. எப்படி தெரியுமா?.. சிங்கம்புலி சொன்ன சூப்பர் விஷயம்
சென்னை: கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித்; கடந்த வருடத்தில் இரண்டு படங்களில் நடித்தார். இரண்டுமே சுமார் ரகம்தான். அடுத்ததாகவும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கார் ரேஸிலும் தீவிரமான கவனத்தை செலுத்திவரும் அவர்; அதிலும் வெற்றிகளை குவிக்கிறார். இந்நிலையில் அவர் பற்றி ரெட் படத்தின் இயக்குநர் சிங்கம்புலி பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவர் அஜித்குமார். முன்பெல்லாம் வருடத்துக்கு ஒரு படம் மட்டுமே நடித்துவந்த அவர்; கடந்த வருடத்தில் மட்டும் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் நடித்திருந்தார். இரண்டு படங்களும் சுமார் ரகத்தில் இருந்தன. குட் பேட் அக்லியை அவரது ரசிகர்கள் மட்டுமே கொண்டாடினார்கள். ஒரே வருடத்தில் இரு படங்களில் ஏகே நடித்தது பெரிய ஆச்சரியத்தை அவரது ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. அஜித்தின் அந்த திடீர் மாறுதலுக்கு ஒரே ஒரு காரணம்தான். அது கார் ரேஸ்.

கார் ரேஸில் கவனம்: தனது திரைத்துறை கரியரை ஆரம்பித்ததிலிருந்தே அவருக்கு ரேஸ் மீது எக்கச்சக்க ஆர்வம். சில பந்தயங்களில் அப்போது கலந்துகொண்டிருந்தாலும்; பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதுமட்டுமின்றி அடிக்கடி விபத்துகளை சந்தித்தார். இதனால் உடல்நிலையும் மோசமானது. கவனம் சிதறி தொடர்ச்சியாக படங்களும் தோல்வியை சந்தித்தன. எனவே ரேஸ் பற்றிய கனவை தூரமாக வைத்துவிட்டு முழுக்க முழுக்க சினிமாவில் கவனம் செலுத்தினார். தற்போது தனக்கென அசைக்க முடியாத மார்க்கெட்டை வைத்திருக்கிறார். எனவே இப்போது கார் ரேஸில் கவனத்தை செலுத்தியிருக்கிறார்.
வெற்றி பெறும் அஜித்: சும்மா பெயருக்காக ரேஸில் கலந்துகொள்ளாமல்; அனைத்தையும் திட்டமிட்டு; பக்கா டீமோடு களமிறங்கி நிறைய வெற்றிகளையும் பெற்றுவருகிறார். சமீபத்தில்கூட ரேஸில் அவரது ஆர்வத்தை பாராட்டும் விதமாக மஹிந்திரா நிறுவனம் சார்பில் உலகத்தின் முதல் ஃபார்முலா ஈ தீம் எஸ்யூவி (Mahindra BE6 Formula E) கார் பரிசாக வழங்கப்பட்டது. அதன் விலை மட்டுமே 30 லட்சம் ரூபாய் ஆகும். இது அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது.
அடுத்த படம்: என்னதான் அவர் கார் ரேஸில் முழு மூச்சாக இறங்கியிருந்தாலும்; அவரது அடுத்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வராமல் இருப்பது ஏகே ரசிகர்களுக்கு அப்செட்டையே கொடுத்திருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குநர் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் தயாரிப்பாளர் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. இப்போது அந்தப் பிரச்னையும் தீர்ந்துவிட்டது எனவும்; விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஜித் பற்றி சிங்கம்புலி பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.
சிங்கம்புலி பேட்டி: டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு அவர் கொடுத்த பேட்டியில், "அஜித் எல்லோருக்கும் உதவுவார். ஆனால் அது வெளியே தெரியாது. ரெட் பட ஷூட்டிங்கில் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் பணத்தை தொலைத்துவிட்டார். அதனால் அவர் சோகத்தில் இருந்தார். இந்த விஷயம் அஜித்துக்கு தெரிந்துவிட்டது. உடனே தயாரிப்பாளருக்கு ஃபோன் செய்து, 'பையன் பணத்தை தொலைத்துவிட்டான். இதில் அவன் தவறு எதுவும் இல்லை. எதுவும் அவனை சொல்லாதீர்கள். எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்' என கூறினார். அதேபோல் ஷூட்டிங்கில் தான் என்ன சாப்பிடுகிறோமோ அதைத்தான் அனைவரும் சாப்பிட வேண்டும் என விரும்புவார். அப்படி இல்லையென்றால் டென்ஷன் ஆகிவிடுவார். கல்விக்கு யாராவது உதவி என்று வந்துவிட்டால் போதும் எதையும் யோசிக்காமல் உதவி செய்துவிடுவார்" என்றார்.


Click it and Unblock the Notifications















