பராசக்தி முதல் காட்சி.. கெனிஷாவுடன் பார்த்த ரவி மோகன்.. வரவேற்பு எல்லாம் பலமா இருக்கே.. செம ரெஸ்பான்ஸ்
சென்னை: பராசக்தி திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் அன் கட் வெர்ஷனாகவும், இந்தியாவில் சென்சார் குழுவினர் சொன்ன திருத்தங்களுடனும் ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் தனது தோழி கெனிஷாவுடன் ரவி மோகன் பராசக்தி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்தார். அவருக்கு ரசிகர்கள் தங்களது பலமான வரவேற்பை கொடுத்தார்கள்.
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் பராசக்தி படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயனின் 25ஆவது படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. முதன்முறையாக இன்னொரு ஹீரோவுக்கு ரவி வில்லனாக நடித்திருக்கிறார். எனவே எந்த மாதிரியான நடிப்பை டெலிவர் செய்திருப்பார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் உச்சக்கட்ட ஆவலோடு இருந்தார்கள். இவர்கள் தவிர்த்து அதர்வா, ஸ்ரீலீலா, பாண்டியராஜனின் மகனான பிருத்வி உள்ளிட்டோரும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார்கள்.
இன்று ரிலீஸான படம்: படத்துக்கு ஏகப்பட்ட சென்சார் கட்டுகளும், மியூட்டுகளும் விழுந்திருக்கின்றன. அதிகாரிகள் சொன்ன அத்தனை திருத்தங்களுடனும் இந்தியாவில் படம் ரிலீஸாகியிருக்கிறது. அதேசமயம் வெளிநாடுகளில் எல்லாம் இந்த கட்டுகளும், மியூட்டுகளும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் இன்று காலை ஒன்பது மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. ஜனநாயகன் படம் ரிலீஸாகததால் பராசக்திக்கு கூடுதல் திரையரங்குகளும் கிடைத்துவிட்டன.

எப்படி இருக்கு பராசக்தி?: ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை மையப்படுத்தி இந்தப் படத்தை இயக்குநர் எடுத்திருக்கிறார். ட்ரெய்லரை பார்த்தபோதே கூஸ்பம்ப்ஸ் அடைந்த ரசிகர்கள்; முழு படத்தையும் பார்க்க இன்று ஆர்வத்தோடு தியேட்டர்களுக்கு படையெடுத்தார்கள். அவர்களை இயக்குநர் முழுக்க முழுக்க திருப்திப்படுத்திவிட்டார் என்றே தெரிகிறது. ஒவ்வொரு சீனும், வசனமும் உணர்வுப்பூர்வமாக இருந்ததாக படம் பார்த்த அனைவருமே சொல்கிறார்கள்.
மிரட்டிய ரவி: அமரன் படத்துக்கு பிறகு சிவாவின் கரியரில் முக்கியமான இடத்தை இந்தப் படம் பிடித்திருக்கிறது. அதேபோல் சிவகார்த்திகேயன் அளவுக்கு ரவி மோகனும் திருநாடன் என்ற கேரக்டரில் அசால்ட்டாக ஸ்கோர் செய்திருக்கிறார். ஸ்டைலிஷ் மற்றும் மிரட்டலான வில்லனாக திரையில் வரும் அவரை பார்த்து ரசிகர்களின் விசில் சத்தமும், கரகோஷமும் குறைந்தபாடில்லை. நிச்சயம் பராசக்தி ரவியின் கரியரில் புதிய அத்தியாயத்தை எழுதும் என்று எதிர்பார்க்கலாம், நம்பலாம்.
சூப்பர் ரெஸ்பான்ஸ்: திரையில் கிடைத்த வரவேற்பு மாதிரியே முதல் காட்சியை அவர் பார்க்க வந்தபோது திரையரங்குகளிலும் சூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. தனது தோழி கெனிஷாவுடன் படம் பார்க்க வந்த அவருக்கு; ரசிகர்கள் ஆள் உயர மாலை அணிவித்து வரவேற்றார்கள். அவரது நடிப்பு அபாரமாக இருந்தது என்று படம் பார்த்துவிட்டு வந்தபோது அவரிடம் சொல்லி ரசிகர்கள் மகிழ்ந்தார்கள். தனது நடிப்புக்கு அப்ளாஸ் அதிகரித்திருப்பதால் அவரும் சந்தோஷமாகவே காணப்படுகிறார்.
அவர் சொன்னது: படம் பார்த்து முடித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திரையரங்குகளில் படத்துக்கு நல்லவிதமான ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. ஹிந்தி திணிப்புக்கு எதிராக வந்த வசனங்களை எல்லாம் ரசிகர்கள் ரொம்பவே என்ஜாய் செய்கிறார்கள்" என்றார். ஜனநாயகன் ரிலீஸாகாதது பற்றியும் பேசிய அவர், 'ஜனநாயகன் கண்டிப்பாக வரும். இப்போதைக்கு போகட்டும் என விஜய் அண்ணா விட்டிருக்கிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications











