ஆர்த்தியுடன் பிரிவு.. ரவி மோகன் எடுத்திருக்கும் முடிவு இதுதானா?.. பெரிய ரிஸ்க் இருக்காதா?
சென்னை: காதலித்து திருமணம் செய்துகொண்டு இரண்டு ஆண் குழந்தைகளை பெற்ற ஆர்த்தியுடன் பிரிவதாக ரவி மோகன் கடந்த வருடம் அறிவித்தார். அந்த அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சியை கிளப்பியது. அதனைத் தொடர்ந்து பின்னணி பாடகி கெனிஷாவை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். கடந்த மாதத்தில் இவர்கள் மூன்று பேர்தான் கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக இருந்தார்கள். இந்தச் சூழலில் ரவி எடுத்திருக்கும் முடிவு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
ஜெயம் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான ரவி பெரிதாக எந்த பிரச்னையிலும் சிக்காதவர். தன் சமகால நடிகர்களிடமும் ஈகோ பார்க்காமல் பழகக்கூடியவர். அதனை நடிகர் விக்ரமே ஒரு விழா மேடையில் ஓபனாக சொல்லியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. அப்படிப்பட்ட ரவி சமீபமாக சர்ச்சைகளில் சிக்கினார். காதலித்து திருமணம் செய்துகொண்ட ஆர்த்தியை பிரிந்த அவர்; பின்னணி பாடகி கெனிஷாவுடன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டார். அதனையடுத்து அவருக்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருந்தார் ஆர்த்தி.
ஆர்த்தி அறிக்கை: ஆர்த்தி வெளியிட்டிருந்த அறிக்கையில், "எனது மௌனத்தை நான் கலைக்கிறேன். என்னுடைய குழந்தைகளுக்காக இந்த விஷயத்தில் கடந்த ஒருவருடமாக நான் மௌனத்தை விரதமாகவே இருந்துவருகிறேன். அதனால் நான் பலகீனமானவள் என்பது இல்லை. எனது பேச்சைவிடவும் குழந்தைகளின் அமைதியான வாழ்க்கை முக்கியம் என்று கருதிதான் அப்படி மௌனமாக இருந்தேன். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள், பழி சொற்கள், வசைகள் அனைத்தையுமே நான் தாங்கிக்கொண்டேன். என் பக்கம் உண்மையும், நியாயமும் இருந்தது. இருந்தாலும் தந்தை மற்றும் தாய் இருவரில் யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் எனது குழந்தைகளுக்கு வந்துவிடக்கூடாது என்று நினைத்தேன்.

பொறுப்பை தூக்கி எறிந்துவிட்டார்: உலகம் இன்று பார்க்கும் நாடகங்களும், காட்சிகளும் வேறு. நடந்த உண்மையே வேறு. எங்கள் விவாகரத்து வழக்கு இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் 18 வருடங்களாக நான் காதல் மற்றும் நம்பிக்கையோடு கைகோர்த்து நடந்த ஒரு மனிதனின்று எனது கைகளை மட்டுமில்லை தன்னுடைய பொறுப்புகளையும் துச்சமாக தூக்கி எறிந்துவிட்டு சென்றிருக்கிறார்.கடந்த பல மாதங்களாக அந்தக் குழந்தைகளின் பொறுப்பை நான் எனது தோள்களில் சுமந்துகொண்டிருக்கிறேன். யாரும் அறியாமல் குழந்தைகள் சிந்தும் கண்ணீரை எனது கைகள் மட்டும்தான் துடைத்துக்கொண்டிருக்கின்றன. இப்போது அவர் புதிய உறவை உருவாக்கிக்கொண்டார். அதனால் அவரது கண்களுக்கு பழைய சுவர் வெறும் செங்கல் சுவர் போல் காட்சியளிக்கிறது" என ஏகப்பட்ட விஷயங்களை அதில் குறிப்பிட்டிருந்தார்.
நீதிமன்றத்தில் கறார்: தொடர்ந்து மாறி மாறி அறிக்கைகளாக வந்துகொண்டிருந்தன. இப்படிப்பட்ட நிலைமையில் இரண்டு பேருக்கும் மத்தியஸ்த பேச்சுவார்த்தை முடிந்ததை அடுத்து விவாகரத்து வழக்கில் அவர்கள் ஆஜரானார்கள். அப்போது தனக்கு மாதம் 40 லட்சம் ரூபாயை ரவி மோகன் ஜீவனாம்சமாக கொடுக்க வேண்டும் என்று ஆர்த்தி ஒரே போடாக போட்டார். பிறகு இதுகுறித்து பதிலளிக்க சொல்லி வழக்கு விசாரணையை இந்த மாதத்துக்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம்.
பிரச்னை என்றாலும் பிஸி: ஒருபக்கம் பெர்சனல் வாழ்க்கையில் இப்படி பிரச்னைகள் வந்தாலும் மறுபக்கம் தனது கரியரிலிருந்து கவனத்தை சிதறவிடவில்லை ரவி. இதுவரை நடிகராக மட்டுமே வந்த அவர்; யோகி பாபுவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே ஒரு தகவல் ஓடிக்கொண்டிருந்தது. இந்நிலையில் அவர் பற்றிய இன்னொரு புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
என்ன ஆச்சு?: அதாவது இயக்குநராக முடிவு செய்திருக்கும் ரவி; தயாரிப்பாளராகவும் மாறவிருக்கிறாராம். தான் தயாரிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பை அவர்; டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் யோகியிடம் கொடுத்திருப்பதாகவும்; இதில் ரவியுடன், எஸ்.ஜே.சூர்யாவும் முக்கியமான ரோலில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட அவரது ரசிகர்களோ, தயாரிப்பாளர் ஆவது பெரிய ரிஸ்க்; இதனை ஏன் ரவி எடுக்கிறார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











