சூர்யா அரசியலுக்கு வர வேண்டுமா?.. அதில் உடன்பாடே இல்லை.. அதிரடியாக பேசிய ஆர்.ஜே.பாலாஜி
சென்னை: கங்குவா படம் சில நாட்களுக்கு முன்பு ரிலீஸானது. சிவா இயக்கியிருக்கும் அந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. அந்த எதிர்பார்ப்புடன் படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உச்சக்கட்ட அப்செட்டில் இருக்கிறார்கள். பலரும் படத்தை கடுமையாக ட்ரோல் செய்துவருகிறார்கள்.
சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவான படம் கங்குவா. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இந்தப் படம் உருவானது. மேலும் சிவா முதன்முறையாக பீரியட் ஜானரில் படம் இயக்குகிறார் என்பதாலும்; அண்ணாத்த படத்தின் படுதோல்விக்கு இதில் பதிலடி கொடுப்பாரா என்ற ஆவலாலும் படத்துக்கு ரசிகர்கள் காத்திருந்தார்கள். மேலும் சூர்யாவின் கரியரிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று ரிலீஸ்: இப்படி எக்கச்சக்க எதிர்பார்ப்புகளோடு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. மொத்தம் 30 மொழிகள், 10,000 திரைகள் என கங்குவா களைகட்டி வெளியானது. ஏற்கனவே படத்துக்கு ஞானவேலுவும், சூர்யாவும் சேர்ந்து மிகப்பெரிய ஹைப்பை ஏற்றிவிட்டார்கள். இதன் காரணமாக மிகப்பெரிய ஆவலோடு படம் பார்க்க தியேட்டருக்கு படையெடுத்தனர் ரசிகர்கள். நிச்சயம் இந்தப் படத்தில் சிவா தரமான சம்பவமாக செய்திருப்பார் என்ற ஆர்வத்தோடும் ரசிகர்கள் இருந்தார்கள்.
நெகட்டிவ் விமர்சனம்: சூழல் இப்படி இருக்க படம் பார்த்த ரசிகர்கள் தங்களது நெகட்டிவ் விமர்சனங்களையே கொடுத்திருக்கிறார்கள். பொதுவான ரசிகர்கள்தான் இப்படிப்பட்ட விமர்சனத்தை கொடுத்தார்கள் என்று பார்த்தால்; சூர்யாவின் ரசிகர்களே படத்தை பார்த்து மிகப்பெரிய அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்கள். சம்பவம் செய்வார் என்று பார்த்தால் சூர்யாவை சிவா வைத்து செய்துவிட்டாரே என்று ஓபனாக சமூக வலைதளங்களில் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஞானவேலுவும்: சிவா மட்டுமின்றி படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோரையும் ரசிகர்கள் விட்டுவைக்கவில்லை. ஞானவேல் கொஞ்சம் வாயையும், தேவிஸ்ரீ பிரசாத் இசை என்கிற பெயரில் போட்ட சத்தத்தையும் குறைத்திருக்கலாம். இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் சிவா மட்டும்தான் என்று ஓபனாக அடிக்க ஆரம்பித்தார்கள். அதேசமயம் இந்தப் படத்துக்கு எதிராக வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள் என்று ஜோதிகாவும் இன்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆர்ஜே பாலாஜி கருத்து: இதற்கிடையே கங்குவா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் போஸ் வெங்கட், 'சூர்யா அரசியலுக்கு வர வேண்டும்' என்று பேசி விஜய்யின் அரசியல் வருகையை மறைமுகமாக அட்டாக் செய்திருந்தார். இந்நிலையில் சூர்யாவை வைத்து படம் இயக்கவிருக்கும் ஆர்.ஜே.பாலாஜி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்த விவகாரம் குறித்து பேசுகையில், "ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சூர்யாவின் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த இடத்தை பயன்படுத்தி வேறு ஒரு கருத்தை சொல்கிற மாதிரி இருந்தது.
உடன்பாடு இல்லை: விஜய் மிகப்பெரிய இடத்தில் இருக்கிறார். தனது கரியர் உச்சத்தில் இருக்கும்போது அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறார். அவர் வந்து நல்லது செய்வாரா செய்யமாட்டாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அவர் அரசியலுக்கு வரக்கூடாது; சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறுகிறார்கள். அதுவும் அடுத்த நாள் விஜய்யின் கட்சி மாநாடு நடக்கவிருக்கிறது. முதல் நாள் இப்படி பேசுகிறார்கள். இது சூர்யா ரசிகர்களை பயன்படுத்துவது போல் எனக்கு தோன்றியது. அதில் எனக்கு உடன்பாடு இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











