3 வருடங்கள் உழைத்தும் பயன் இல்லையே.. கங்குவா சூர்யா பற்றி ஆர்.ஜே. பாலாஜி ஓபன்
சென்னை: சூர்யா நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு வெளியான கருப்பு திரைப்படம் மெகா ஹிட்டாகி உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருக்கிறது. ரெட்ரோ, கங்குவா என வரிசையாக தோல்விகளை சந்தித்து வந்த சூர்யாவுக்கு கருப்பு திரைப்படத்தின் வெற்றி ஆசுவாசத்தை கொடுத்திருக்கிறது. இனிவரும் படங்களும் இதேபோன்ற ஹிட்டை பெற வேண்டும் என்பதுதான் அவரது ரசிகர்களின் தீராத ஆசையாக இருக்கிறது. இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜி சமீபத்தில் கொடுத்திருக்கும் பேட்டி ட்ரெண்டாகியுள்ளது.
சூர்யாவின் கரியரிலேயே கங்குவா படத்தை யாருமே மறக்கமாட்டார்கள். அஞ்சான் படத்துக்கு எப்படி அதன் இயக்குநர் லிங்குசாமி ஓவர் ஹைப் கொடுத்து மாட்டிக்கொண்டாரோ; அதேபோல் இந்தப் படத்துக்கும் இயக்குநர் சிவா, நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்டோர் எக்கச்சக்க ஹைப்பை ஏற்றினார்கள். இப்படியும் படம் எடுக்கலாமா என்று வாயை பிளந்துகொண்டு இந்தப் படத்தை பார்ப்பார்கள் என சூர்யா உள்ளிட்டோரும், படம் கண்டிப்பாக 2000 கோடி ரூபாயை அள்ளும் என்று தயாரிப்பாளரும் கூறினார்கள்.

மோசமான தோல்வி: ஆனால் அவர்கள் ஏற்றி வைத்த ஹைப்புக்கு தகுந்தபடி படத்தில் எதுவுமே இல்லை. சிவாவின் மேக்கிங், சூர்யாவின் நடிப்பு என எதிலுமே உருப்படியான விஷயம் எதுவுமே இல்லை; கிராஃபிக்ஸ் காட்சிகள் எல்லாம் கார்ட்டூன் காட்சிகள் போன்று இருப்பதாக கழுவி கழுவி ஊற்றினார்கள். சூர்யாவுடைய கரியரிலேயே மோசமான தோல்வியையும், ட்ரோலையும் சந்தித்த படம் அஞ்சான் என்று இருந்தது. அந்த ரெக்கார்டை கங்குவா உடைத்தது என்பதும் கவனிக்கத்தக்கது.
மறக்க நினைத்த சூர்யா: கங்குவா படத்தின் தோல்வியை எப்படியாவது மறந்துவிட வேண்டும் என தவித்துக்கொண்டிருந்தார். அந்தவகையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்தார். அதுவும் மோசமான தோல்வியைத்தான் சந்தித்தது. இப்படிப்பட்ட நிலைமையில்தான் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்தார். இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க; சாய் அபயங்கர் இசையமைத்திருந்தார். கடந்த 15ஆம் தேதி படமானது தியேட்டர்களில் ரிலீஸானது.
படம் மெகா ஹிட்: கங்குவா, ரெட்ரோ மாதிரி ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் சென்ற ரசிகர்களுக்கு இயக்குநர் சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார். கமர்ஷியல் காட்சிகள், குடும்பத்துக்கு தேவையான விஷயங்கள் என அனைத்தையும் சரியான கலவையில் பாலாஜி கொடுத்திருந்ததால்; படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். பலர் மீண்டும் மீண்டும் தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்தார்கள். இதுவரை அந்தப் படம் மொத்தம் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை அள்ளியிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்துவிட்டது.
ஆர்.ஜே. பாலாஜி பேட்டி: இந்நிலையில் கருப்பு படத்தின் வெற்றி கொடுத்த உற்சாகத்தோடு சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார் பாலாஜி. அப்போது கங்குவா பற்றி பேசிய அவர், "கங்குவா படத்துக்காக சூர்யா மூன்று ஆண்டுகள் செலவிட்டார். ஆனால் அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதற்கு பிறகு பத்து நாட்களிலேயே அவர் என்னுடைய செட்டுக்கு வந்துவிட்டார். அவரது எனர்ஜி அப்படியேத்தான் இருந்தது. கருப்பு படத்துக்காக நாங்கள் சூர்யாவுடன் 51 நாட்கள் மட்டுமே ஷூட் செய்தோம். குறைந்த நாட்களில் ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். அது நிறைவேறியிருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications
