இத்தனை வருடங்களில் இதுதான் முதன்முறை.. மனம் திறந்த சூர்யா.. சீக்ரெட் சொன்ன ஆர்.ஜே.பாலாஜி
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா இப்போது கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.கடந்த 14ஆம் தேதி வெளியாகி தோல்வி படமாக மாறிவிட்டது. தோல்வி மட்டுமின்றி கடுமையான ட்ரோலையும் படம் சந்தித்திருக்கிறது. இதனால் இனி வரும் படங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். இந்தச் சூழலில் அடுத்ததாக அவர் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
சூர்யாவின் நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்கு முன்பு எதற்கும் துணிந்தவன் ரிலீஸாகி சுமாரான வரவேற்பை பெற்றது. அதனையடுத்து பாலாவின் வணங்கான் படத்தில் கமிட்டாகி அதிலிருந்து விலகிய சூர்யா; சிவாவின் கங்குவா படத்தில் நடிக்க கமிட்டானார். சிவா இயக்கிய அண்ணாத்த படம் படுமோசமான தோல்வியை சந்தித்ததன் காரணமாக சூர்யாவை வைத்தும் சிவா செய்துவிடுவாரோ என்றே ரசிகர்கள் ஓபனாக சமூக வலைதளங்களில் பேசினார்கள். ஆனாலும் படத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஒருபக்கம் இருக்கவும் செய்தது.

நெகட்டிவ் விமர்சனம்: கடந்த 14ஆம் தேதி கங்குவா படமானது ரிலீஸானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. 2000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறினார். ஆனால் இதுவரை 42 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் 100 கோடி ரூபாயை படம் வசூலிப்பதே சந்தேகம்தான் என்று திரைத்துறையினரிடம் பரவலாக பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.
அடுத்த படம்: கங்குவா படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44ஆவது படத்தில் நடித்திருக்கிறார் சூர்யா. கார்த்திக் எப்போதும் தனது படங்களின் மேக்கிங்கில் வித்தியாசம் காண்பிப்பவர். இதன் காரணமாக இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது. மேலும் சூர்யாவின் கரியரில் நிச்சயம் இந்தப் படம் நல்ல பெயரை பெறும் என்றும்; கங்குவாவில் வாங்கிய அடிக்கு இந்தப் படத்தில் சூர்யா மருந்திட்டுக்கொள்வார் என்றும் ரசிகர்கள் கூறுகிறார்கள்.
ஆர்.ஜே.பாலாஜி: சூழல் இப்படி இருக்க கார்த்திக் சுப்புராஜின் படத்துக்கு பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சூர்யா. பாலாஜி ஏற்கனவே மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களை இயக்கி நம்பிக்கைக்குரிய இயக்குநராக மாறியிருக்கிறார். எனவே சூர்யாவை எந்த மாதிரி பாலாஜி யூஸ் செய்யப்போகிறார் என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. சமீபத்தில்தான் படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.
பாலாஜி பேட்டி: இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஆர்.ஜே.பாலாஜி, "சூர்யா 45 கதையை கேட்டவுடன், '16 வருடங்களில் முதன்முறையாக ஒரு கதையை கேட்டவுடன் நடிக்க சம்மதிப்பது இந்த கதைக்குத்தான்' என்று கூறினார். அந்த அளவு இந்தப் படத்தின் கதை அவருக்கு பிடித்திருக்கிறது. அதுமட்டுமின்றி திரையில் பார்த்து அனைத்துவிதமான ரசிகர்களால் கொண்டாடப்படும் படமகா சூர்யா 45 இருக்கும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











