Vijayakanth-விஜயகாந்த் இறப்புக்கு இதுதான் காரணமா?.சந்தேகம் கிளப்பும் எஸ்.ஏ.சந்திரசேகர்.என்ன இது புதுசா இருக்கு
சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பால் விஜயகாந்த்தின் ரசிகர்கள், தொண்டர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் உச்சக்கட்ட சோகத்துக்கு சென்றனர். இந்த சூழலில் விஜயகாந்த்துக்கு ரொம்பவே நெருக்கமாக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்த்தின் மரணம் குறித்து பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
கேப்டன் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நலக்குறைவால் ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுங்கி முழுக்க முழுக்க ஓய்வில் இருந்தார். அவ்வப்போது தொண்டர்களை சந்திப்பதை மட்டும் வழக்கமாக வைத்திருந்தார். இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதன் காரணமாக் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினார். ஆனால் மறுபடியும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

உயிரிழப்பு: அவருக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் தள்ளியது. சாமானியர்கள் முதல் சினிமா பிரபலங்கள்வரை திரண்டு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். விஜய்யோ விஜயகாந்த்தின் உடலை பார்த்து கலங்கியேவிட்டார். சூர்யாவும் விஜயகாந்த்தின் நினைவிடத்துக்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு தேம்பி தேம்பி அழுதார்.
எஸ்.ஏ.சி பேட்டி: இந்நிலையில் விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்த் குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அவர் அளித்த பேட்டியில், "விஜயகாந்த்துக்கும் எனக்குமான உறவு சாதாரணமானதுஇல்லை. ஒரு நடிகருக்கும் இயக்குநருக்குமான உறவை தாண்டியது எங்களது உறவு. அவரை நான் ஒரு தம்பியாகவே நினைத்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் ஒரு நண்பனாக அவரை நான் நேசித்திருக்கிறேன்.
குரு: என்னை அவர் குரு என்ற உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருந்தார். என்னை மட்டும்தான் அவர் அந்த ஸ்தானத்தில் வைத்திருந்தார். அவர் வேறு யாரையும் அப்படி சொல்லியோ, அந்த இடத்தில் வைத்தோ நான் பார்த்ததில்லை. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக விஜயகாந்த்தை அவரது வீட்டில் சந்தித்தேன். அப்போது கஷ்டப்பட்டு எழ முயற்சித்தார். நானோ குனிந்து அவரை கட்டியணைத்துக்கொண்டேன்.
நம்பினேன்: அவர் அரசியலில் மிகப்பெரிய இடத்துக்கு செல்வார் என்று நான் கணக்கு போட்டிருந்தேன். மூன்றாவது தேர்தலின்போது அவர் முதலமைச்சராகிவிடுவார் என்று நம்பினேன். ஆனால் நடக்கவில்லை. 2016ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். அவருக்கு மிகப்பெரிய அறுவை சிகிச்சை ஒன்று நடந்தது. அதற்கு பிறகு போஸ்ட் ஆபரேஷன் கேர் என்ற ஒன்று இருக்கிறது. ஒரு திரைப்படம் நன்றாக வர வேண்டுமென்றால் அதற்கு போஸ்ட் புரொடக்ஷன், ப்ரீ புரொடக்ஷன் இந்த இரண்டும்தாம் அவசியம். ஷூட்டிங் செய்வதால் மட்டுமே படம் நன்றாக வந்துவிடாது. படப்பிடிப்பில் என்ன தவறு நடந்திருந்தால்லும் அதை போஸ்ட் புரொடக்ஷனில்தான் சரி செய்வோம்.
அப்படித்தான் வாழ்க்கையும்: அதேபோல்தான் வாழ்க்கையும். ஆபரேஷனுக்கு பிறகு அவரது சிகிச்சை முறையாக இருந்ததா என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் அவ்வளவு எளிதாக தளர்ந்துவிடும் உடல் அல்ல விஜயகாந்த்தின் உடல். அவருக்கு நெருக்கமானவர்களை அவர் அடிக்கடி சந்தித்து வந்திருந்தாலே அவர் இன்னும் பல காலம் வாழ்ந்திருப்பார். அதை நினைக்கும்போதுதான் மனம் அடித்துக்கொள்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











